ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

திருவாரூர் புறவழிச் சாலைத் திட்டம் நிறைவேற்றப்படுமா?

திருவாரூர், செப். 17: திருவாரூர் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற  மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமல் இன்றுவரை கனவாகவே தொடர்கிறது.       மக்கள்தொகையும், வாகனங்களின் எண்ணிக்கையும்

Updated On :20 செப்டம்பர் 2012, 5:48 pm

திருவாரூர், செப். 17: திருவாரூர் நகருக்கு புறவழிச் சாலை அமைக்கப்பட வேண்டும் என்ற  மக்களின் எதிர்பார்ப்பு நிறைவேற்றப்படாமல் இன்றுவரை கனவாகவே தொடர்கிறது.

      மக்கள்தொகையும், வாகனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வரும் நிலையில், அதற்குத் தேவையான அளவில் அடிப்படை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், வாகனங்கள் செல்ல சாலைகள் அமைக்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம். ஆனால், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக திருவாரூர் மக்களின் கோரிக்கையான புறவழிச் சாலை இதுவரை அமைக்கப்படாதது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

     நாகை மாவட்டத்தில் திருவாரூர், 1996-2001-ல் திமுக ஆட்சியில் பிரிக்கப்பட்டு 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 10 ஊராட்சி ஒன்றியங்களுடன் தனி மாவட்டமாக 1.1.1997-ல் உருவாக்கப்பட்டது. ஆனால், ஒரு மாவட்டத் தலைமையகத்துக்குரிய அனைத்து அம்சங்களும் 13 ஆண்டுகளுக்கு மேலாகியும், இதுவரை முழுமையாக நிறைவு செய்யப்படவில்லை.      திருவாரூரில் உள்ள அருள்மிகு தியாகராஜசுவாமி திருக்கோயிலின் தேரோடும் நான்கு வீதிகள் தவிர, மற்ற அனைத்துமே குறுகிய, சிறிய சாலைகள்தான். முறையான நகரக் கட்டமைப்புக்கு உள்படாத நகரமாகவே திருவாரூர் உள்ளது.      மயிலாடுதுறை, திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, கும்பகோணம், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய நகரங்களுக்கு திருவாரூரிலிருந்து தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் செல்கின்றன. இவற்றில் எந்த நகரத்திலிருந்தும் மற்றொரு நகரத்துக்கு திருவாரூர் வழியாகச் செல்ல திருவாரூர் நகரின் உள்ளே புகுந்து, திருக்கோயிலின் வீதிகளைக் கடந்துதான் செல்ல வேண்டிய நிலை. இந்த முக்கியச் சாலைகளை நகருக்கு வெளியே இணைக்கும் புறவழிச்சாலை இல்லாததால்தான் இந்த நிலைமை.    நாகை, காரைக்கால் மாவட்டங்களில் உள்ள தொழில்சாலைகளுக்குச் செல்லும் கனரக வாகனங்கள், டேங்கர் லாரிகள் அனைத்துமே நகரின் குறுகலான சாலையில் வாகன நெரிசலில்தான் செல்ல வேண்டும். இதில் தற்போது நகரில் நடைபெற்று வரும் புதைசாக்கடைத் திட்டத்தால் மக்களும், வாகன ஓட்டிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இது ஒருபுறம் இருந்தாலும், நகருக்குள் வரத் தேவையில்லாத வாகனங்கள் அனைத்தும் தத்தமது இலக்குகளைச் சென்றடைய புறவழிச்சாலை அமைவது மிகவும் அவசியமாகிறது.

     2000-ம் ஆண்டிலேயே அப்போதைய திருவாரூர் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த அ. அசோகன், திருவாரூரில் புறவழிச்சாலை அமைக்க வேண்டுமென சட்டப்பேரவையில் வலியுறுத்தினார். இதைத்தொடர்ந்து, நெடுஞ்சாலைத் துறை சார்பில் 10 கிலோ மீட்டர் நீள அரைவட்ட புறவழிச் சாலை ஏறத்தாழ | 12 கோடியில் அமைக்க மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு, அரசின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. அதன் பின்னர் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, தற்போது சட்டப்பேரவை உறுப்பினரும், பால்வளத் துறை அமைச்சருமான உ. மதிவாணன் மேற்கொண்ட முயற்சியின் பலனாக, நெடுஞ்சாலைத் துறை மூலம் 10 கிலோ மீட்டர் தொலைவுக்கு | 74 கோடியில் அரைவட்ட புறவழிச் சாலை அமைக்க தோராய மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டன.

     இத்திட்டத்தின்படி, தஞ்சாவூர் சாலையில் தண்டலை அய்யனார் கோயில் அருகிலிருந்து தொடங்கி கும்பகோணம் சாலையில் காட்டூர், மயிலாடுதுறை சாலையில் சேந்தமங்கலம், அடியக்கமங்கலம் வழியாக, நாகப்பட்டினம் சாலையில் கிடாரங்கொண்டான் அருகே தஞ்சாவூர் - நாகப்பட்டினம் தேசிய நெடுஞ்சாலையில் இணையும் வகையில் அரைவட்ட புறவழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. இதில் ஓடம்போக்கி ஆற்றில் இரு பெரிய பாலங்கள், அடியக்கமங்கலம் அருகே திருவாரூர் - மயிலாடுதுறை ரயில் பாதையில் உயர்நிலை மேம்பாலம் உள்ளிட்டவையும் அமையவுள்ளன.

     இந்த புறவழிச் சாலை அமைந்தால், நகரின் எல்லைகளும் வளர்ச்சி பெறும்; வாகனங்களும் எளிதாகச் செல்ல முடியும். நகரிலும் போக்குவரத்து நெரிசல் குறையும். ஆனால், இப்பணிகளுக்கான திட்டமிடல்கள் தொடங்கப்பட்டு, ஏறத்தாழ இரண்டாண்டுகளுக்கு மேலாகியும், அடுத்தகட்டப் பணிகளான நிலம் கையகப்படுத்துதல், நிதி ஒதுக்கீடு உள்ளிட்டவை இதுவரை மேற்கொள்ளப்படுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியவில்லை என்கின்றனர் விஷயமறிந்தவர்கள்.     எனவே, அடுத்தகட்டப் பணிகளுக்கு தமிழக அரசு விரைந்து அனுமதி அளித்து, புறவழிச் சாலை அமைக்கும் பணியை நிகழாண்டிலேயே தொடங்கி, விரைந்து முடிக்க வேண்டும் என்பதுதான் திருவாரூர் மக்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.