ராமதாஸ் பாமகவின் 30 வேட்பாளர்களுக்கு சிலிண்டர் சின்னம்!முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சி.டி. கோபிநாத் 96 வயதில் காலமானார்!புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!ஏப்ரல் 17 முதல் கோடை விடுமுறை!பங்குச்சந்தை வீழ்ச்சி! 900 புள்ளிகள் சரிந்த சென்செக்ஸ்!!திட்டங்கள் இருக்கும் வரை ஸ்டாலின்தான் தமிழ்நாட்டை ஆள்வான்! - முதல்வர் ஸ்டாலின்புதுவையில் வரலாறு காணாத வாக்குப் பதிவு!தமிழ்நாட்டின் வளர்ச்சியை திமுக விரும்பவில்லை: பியூஷ் கோயல்!வேட்பாளரைத் திரும்பப் பெற்ற காங்கிரஸ்! சுநேத்ரா பவார் வெற்றி உறுதி?
/

நதிநீர் உரிமைகள் நிலைநாட்டப்படுமா?

திருவாரூர், ஏப். 26: காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்தின் தொன்மையான, நியாயமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.      தமிழகத்தின்

Updated On :20 செப்டம்பர் 2012, 1:06 am

திருவாரூர், ஏப். 26: காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு உள்ளிட்ட நதிநீர் பிரச்னைகளில் தமிழகத்தின் தொன்மையான, நியாயமான உரிமைகள் நிலைநாட்டப்பட வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

     தமிழகத்தின் பெரும்பாலான நீர்த் தேவைகள் அண்டை மாநிலங்களைச் சார்ந்ததாகவே இருந்து வருகிறது. நதிநீர் பிரச்னைகளை தீர்க்க அமைக்கப்பட்ட நடுவர் மன்றங்களும், நீதிமன்ற வழக்குகளும்கூட தீர்க்கப்படாமலேயே நிலுவையில் உள்ளன. இதனால், தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருவது தமிழகம்தான். தமிழகத்தின் 2 கோடி மக்களின் வாழ்வாதாரமாகவும், ஏறத்தாழ 5 கோடி மக்களின் குடிநீர் ஆதாரமாகவும் உள்ள காவிரி பிரச்னையில் தீர்வு ஏற்பட அரசியல் கட்சிகள் போதுமான அளவுக்கு முன் முயற்சிகள் எடுக்காதது விவசாயிகளிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

     1971-ல் தமிழகத்தின் மக்கள் தொகை 4.11 கோடியாக இருந்த போது தொடங்கிய காவிரி நீர் பிரச்னை, தற்போது 2011-ம் ஆண்டில் 7.21 கோடியைக் கடந்த நிலையிலும் தீர்க்கப்படாமலேயே உள்ளது. தமிழகத்துக்கு காவிரியில் 1934-ம் ஆண்டு முதல் 1970-ம் ஆண்டு வரையிலான 36 ஆண்டுகளில் கிடைத்த சராசரி ஆண்டு நீரின் அளவு 378 டி.எம்.சி ஆகும். 1991-ம் ஆண்டில் காவிரி நடுவர் மன்றத்தின் இடைக்காலத் தீர்ப்பின் அடிப்படையில் அது 205 டி.எம்.சி.யாக குறைந்தது.

இறுதித் தீர்ப்பில் 192 டி.எம்.சி.யாக (புதுச்சேரி மாநிலத்துக்கும் சேர்த்து) மேலும் சுருங்கிவிட்டது.

    இந்தக் குறைந்த அளவு நீரைக்கூட உரிய நேரத்தில் தராமல் கர்நாடகத்தின் அணைகள் நிரம்பி வழிந்தால்தான் தமிழகத்துக்கு நீர் கிடைக்கும் என்ற அநீதி, அவலங்களுக்கு 40 ஆண்டு காலமாக ஆட்சி செய்து வரும் மத்திய, மாநில அரசுகள்தான் பொறுப்பு என்கின்றனர் விவசாயிகள்.

     இதுகுறித்து தஞ்சாவூர், திருவாரூர், நாகை மாவட்ட விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் பொதுச் செயலர் ஆறுபாதி ப. கல்யாணம் கூறியது: கர்நாடகத்தின் நீர்வள நிபுணர் மறைந்த பி.எஸ். பவானிசங்கர், தமிழகத்தின் சிவனப்பன் மற்றும் மத்திய அரசுத் துறை ஆய்வுகளின்படி, கர்நாடகத்தின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் ஆண்டுதோறும் உற்பத்தியாகும் நீரில் 2,000 டி.எம்.சி. நீர் உபரியாகக் கடலில் வீணாகக் கலக்கிறது எனத் தெரிய வருகிறது.

     இந்த வெள்ள உபரி நீரில் 200 டி.எம்.சி.யை நேத்ராவதி மற்றும் சுற்றியுள்ள  ஆறுகள் வழியாக நீரேற்றுத் திட்டங்கள் மூலம் கர்நாடகத்தில் ஹேமாவதி அணைக்கு திருப்பி, அந்த மாநிலத்தில் 1970-ம் ஆண்டுக்குப் பின்னர் விரிவுபடுத்தப்பட்ட பாசனப் பகுதிகளுக்கு இந்த தண்ணீரைப் பயன்படுத்த வகை செய்துவிட்டு, தமிழகம் காவிரியில் பெற்றிருந்த தொன்மையான நீர் வரத்தை உறுதி செய்யலாம்.

     1956-ம் ஆண்டு மொழிவாரி மாநிலப் பிரிவினையின்போது, முல்லைப் பெரியாறு கேரளத்தின் பகுதியாக வரையறுக்கப்படுவதை பலரும் எதிர்த்த போது, அப்போதைய முதல்வர் காமராஜர், கேரளம் இந்தியாவில்தான் இருக்கிறது என்றார். அவரைப் போல, இந்தியா என்பது ஒரே தேசம் என்ற தொலைநோக்குப் பார்வை இன்றுள்ள இந்திய அரசியல் தலைவர்களில் பலருக்கும் இல்லை.

     தேசிய மற்றும் மாநிலக் கட்சிகள் காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு பிரச்னைகளில் தமிழகத்தின் தொன்மையான உரிமைகளை நிலைநாட்ட போராட முன்வர வேண்டும்.

     இந்த பிரச்னைகளில் மத்திய அரசு நியாயமாக நடக்காவிடில், 1956-ம் ஆண்டில் மொழிவாரி மாநிலப் பிரிவினையின் போது, கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்களுக்குத் தாரை வார்க்கப்பட்ட பழைய சென்னை மாகாணத்தின் முக்கிய நீர்ப்பிடிப்புப் பகுதிகளை உள்ளடக்கி, மேற்குத் தொடர்ச்சி மலை உச்சியை மையமாக வைத்து குமரி முதல் குடகு வரை தமிழகத்தின் மாநில எல்லைகளை மறுவரையறை செய்தால்தான் இந்த பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் என்றார் கல்யாணம்.

எனினும், மக்களின் உணவுத் தேவையை நிறைவு செய்யும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உறுதிப்படுத்த, தமிழகத்தின் நதிநீர் உரிமைகள் குறித்த பிரச்னைகள் விரைந்து தீர்க்கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்பது மட்டும் நிச்சயம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.