டி20 உலகக் கோப்பை பட்டத்தை தக்க வைக்குமா இந்தியா? நியூஸிலாந்துடன் இன்று இறுதி ஆட்டம்!டிரம்ப்பைக் கொல்ல சதி: பாகிஸ்தானியா் குற்றவாளி எனத் தீா்ப்புஅமெரிக்காவிடம் இந்திய தரவுகள்: ராகுல் காந்தி குற்றச்சாட்டுகமல்ஹாசன், சிரஞ்சீவிக்கு தெலங்கானா அரசு திரைப்பட விருது லெபனானில் மாயமான இஸ்ரேல் வீரரைத் தேடி வான்வழித் தாக்குதல்: 41 போ் உயிரிழப்புரஷியாவின் புதிய கச்சா எண்ணெய்க்கும் தடையை விலக்க வாய்ப்பு: அமெரிக்கா
/

மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுமா?

திருத்துறைப்பூண்டி, பிப். 12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுமா? அல்லது வெறும் அறிவிப்போடு நின்றுவிடுமா என்று மீனவர்கள், பொதுமக்கள் கேள்வியெ

News image
Updated On :20 செப்டம்பர் 2012, 1:23 am

ஏ. ரவி

திருத்துறைப்பூண்டி, பிப். 12: திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படுமா? அல்லது வெறும் அறிவிப்போடு நின்றுவிடுமா என்று மீனவர்கள், பொதுமக்கள் கேள்வியெழுப்புகின்றனர்.

     திருவாரூர் மாவட்டத்தில் முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை, வடக்கு வெள்ளாதிக்காடு, துரைக்காடு, செங்கங்காடு, கீழவாடியக்காடு, தொண்டியக்காடு, ஆலங்காடு உள்ளிட்ட பகுதிகளில் சுமார் 7 ஆயிரம் மீனவர்கள் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

       அவர்கள் சுமார் 300-க்கும் மேற்பட்ட படகுகளில் மீன்பிடிக்க கடலுக்கு சென்று வருகின்றனர்.

      இதில் 100-க்கும் மேற்பட்டோருக்கு மட்டும் மீன்வளத் துறை மூலம்  மாதத்துக்கு 300 லிட்டர் டீசல் லிட்டருக்கு ரூ. 6.40 என்ற மானிய விலையில் வழங்கப்பட்டு வருகிறது. இதுதவிர, வேறு எந்த சலுகையும் அரசின் சார்பில் வழங்கப்படுவதில்லை என மீனவர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது, செஞ்சிலுவை சங்கம் சார்பில் 40 படகுகள் வழங்கப்பட்டுள்ளன.

     இதனிடையே, ஆசாத் நகர், பேட்டை ரோடு, தெற்குத்தெரு, வடக்கு வெள்ளாதிக்காடு, ஆலங்காடு, கோவிலான்தோப்பு பகுதி மீனவர்கள் பயன்பெறும் வகையில் இந்த பகுதியில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க வேண்டும் என நாகை மக்களவைத் தொகுதி உறுப்பினர் ஏ.கே.எஸ். விஜயன், பேரூராட்சித் தலைவர் எம்.எஸ். கார்த்திக் உள்ளிட்ட பலர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர்.

      இதையடுத்து, இந்த பகுதிக்கு வந்த அப்போதைய மத்திய தரைவழி மற்றும் கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் டி.ஆர். பாலு மீனவர்களுடன் கலந்துரையாடல், ஆய்வு மேற்கொண்டார். இதனடிப்படையில், முத்துப்பேட்டை, ஜாம்பவானோடையில் தலா ரூ. 2.5 கோடி மதிப்பீட்டில் மீன்பிடித் துறைமுகம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் அறிவித்தார்.  

     இதைத்தொடர்ந்து, துறைமுகப் பொறுப்புக் கழக அதிகாரிகளும், மீன்வளத் துறையினரும் இந்தப் பகுதியில் ஆய்வுகள் மேற்கொண்டனர். இதனால், இந்தப் பகுதியில் விரைவில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்படும் என்று மக்களும் எண்ணினர். ஆனால், இன்றுவரையில் அமைச்சரின் உறுதி வெறும் அறிவிப்போடு மட்டுமே நிற்கிறது.

      இந்த பகுதியில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கும் திட்டம் எதுவும் தங்களிடம் இல்லை என மாநில சிறு துறைமுகங்கள் துறையும், துறைமுக பொறுப்புக் கழகமும் கைவிரித்து விட்டதாக கூறப்படுகிறது.

     மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்கப்படாததற்கு மத்திய அமைச்சர் பதவியில் டி.ஆர். பாலு தொடராதது, சேதுசமுத்திரத் திட்டம் கைவிடப்பட்டது என்பன உள்ளிட்ட பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.       இதுகுறித்து படகு உரிமையாளர் சங்கத் தலைவர் என். பாரூக், துரைக்காடு கடல் மீனவர் சங்க நிர்வாகி எம். இஸ்மாயில் ஆகியோர் கூறியது:

      முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை பகுதிகளில் மீன்பிடித் துறைமுகம் என்பது வெறும் அறவிப்போடு நிற்கிறது. இதுகுறித்து எந்த அலுவலர்களும் உரிய பதிலளிக்க மறுக்கின்றனர்.       இந்த பகுதியில் மீன்பிடித் துறைமுகம் அமைக்கப்பட்டால், பெரிய படகுகளை நிறுத்தவும், மீன்களையும், வலைகளையும் உலர்த்தவும், சுகாதார முறையில் மீன்கள் விற்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  தற்போது சென்னை - கன்னியாக்குமரி செல்லும் கிழக்கு கடற்கரை சாலை முத்துப்பேட்டை வழியாக செல்வதால், மீன்களை வெளியூர்களுக்கு விரைவில் அனுப்ப முடியும். இதனால் மீனவர்களின் வாழ்வாதாரம் உயர வாய்ப்பு கிடைக்கும்.

     துறைமுகங்கள் இல்லாததால், மீனவர்கள் ஆசாத் நகர் உள்ளிட்ட கிடைக்கும் இடங்களில் தங்கள் படகுகளை நிறுத்தி விடுகின்றனர். இதனால், அந்தப் பகுதியில் மீன்பிடிப்பது பாதிக்கப்படுகிறது.

     எனவே, மீனவர்கள், பொதுமக்கள் நலன் கருதியும், மீனவர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையிலும் ஏற்கெனவே அமைச்சர் அறிவித்தப்படியும், முத்துப்பேட்டை, ஜாம்பவானோடை ஆகிய இடங்களில் மீன்பிடித் துறைமுகங்கள் அமைக்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும், இந்த பகுதியில் படகுகள் தடையின்றி வந்து செல்லும் வகையில் கடல் முகத்துவாரம் வரை ஆழப்படுத்தி தர வேண்டும். படகுகள் வாங்க மீனவர்களுக்கு மானியத்துடன் கூடிய கடனுதவியும், மீனவர்களுக்கான கூட்டுறவு அமைப்புகளில் மீனவர்கள் எளிதில் சேரும் வகையில், தடைகளை களைய வேண்டும். அனைத்து மீனவர்களையும் உரிய முறையில் கணக்கெடுத்து, அவர்களை உறுப்பினர்களாக சேர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் தெரிவித்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.