கரூர், ஜன. 8: கரூர் மாவட்ட உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை சார்பில், தேசிய நுகர்வோர் தின விழா கரூரில் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
கரூர் நாரதகான சபாவில் நடைபெற்ற விழாவிற்கு ஆட்சியர் ஜெ. உமாமகேஸ்வரி தலைமை வகித்தார்.
நிகழ்ச்சியில் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளர் மு. ஹேமா பேசியது:
கரூர் மாவட்டத்திலுள்ள 526 நியாய விலைக் கடைகளிலும் எலக்ட்ரானிக் தராசுகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. நியாய விலைக் கடைகளில் வழங்கப்படும் அரிசி, கோதுமை, சர்க்கரை போன்றவற்றில் ஏதாவது குறைபாடுகள் இருந்தால் 94892 06510 என்ற செல்போன் எண்ணுக்குத் தெரிவிக்கலாம்.
குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் விற்பனை செய்யப்பட வேண்டிய பொருள்களை அந்தக் காலத்திற்குள் விற்பனை செய்ய வேண்டும். கெட்டப்போன பொருள்களை விற்பனை செய்யக் கூடாது என்று விற்பனையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து கண்காணிப்புப் பணியிலும் ஈடுபட்டு வருகிறோம். பொருள்கள் வாங்குவோருக்கு கைகளால் ரசீது போடுவதால் ஏற்படும் குளறுபடிகளை சரிசெய்யும் வகையில், விரைவில் பட்டியிலிடும் மின் இயந்திரம் மூலமாக ரசீது வழங்கும் முறை கடைப்பிடிக்கப்படும். மேலும், கரூர் மாவட்டத்திலுள்ள நியாய விலைக் கடைகளில் வெங்காயம் கிலோ | 48-க்கும், பூண்டு கிலோ | 200-க்கும் விற்பனை செய்யப்படுகிறது என்றார் அவர்.
மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலர் வி. நாகஜோதி வரவேற்றார். கரூர் வட்ட வழங்கல் அலுவலர் எம். உதயகுமார் நன்றி கூறினார்.