தஞ்சாவூர், ஜன. 8: நாத்திகம் குறித்த எதிர்மறை சிந்தனையை மக்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார் விஜயவாடா நாத்திகர் மைய செயல் இயக்குநர் முனைவர் ஜி. விஜயம்.
பெரியார் மணியம்மை பல்கலைக்கழகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற நாத்திகம் என்னும் மாற்று பண்பாடு என்ற தலைப்பிலான சர்வதேச மாநாட்டில் அவர் மேலும் பேசியது:
இந்தியாவில் 20 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண்கள் அரசியலில் உயர்பதவி வகிக்க முடியுமா என்ற நிலை இருந்தது. ஆசியா போன்ற வளரும் நாடுகளில் இப்பிரச்னை அதிகம். பின்னர், இந்திரா காந்தி தொடங்கி தற்போதைய குடியரசுத் தலைவர் வரை பெண்கள் உயர்பதவிகளை அடைந்துள்ளனர்.
நாம் ஜாதி, சமயம், தீண்டாமைக்கு அப்பாற்பட்டு சிந்திக்க வேண்டும். 21-ம் நூற்றாண்டில் வாழும் நாம் அனைத்துவித அடிமைத்தனத்திலிருந்தும் மக்களை விடுவிக்க வேண்டியவர்களாக உள்ளோம். மக்கள் சுந்திரமாக சிந்திக்கவும், செயல்படவும் இவை உதவும்.
நாத்திகம் என்பது இங்கு எதிர்மறைக் கண்ணோட்டதிலேயே அணுகப்படுகிறது. அப்படி இல்லாமல் நேர்மறையாக நோக்க வேண்டும். தமிழ்நாட்டில் கலப்புத் திருமணங்களையும், பதிவுத் திருமணங்களையும் அதிக அளவில் பார்க்க முடிகிறது. இதற்கு நாத்திக இயக்கங்களின் பங்களிப்பே காரணம். வட இந்தியாவில் நிலைமை வேறுவிதமாக உள்ளது.
பெயருக்குப் பின்னால் ஜாதியின் பெயரைப் பயன்படுத்தாதீர். ஜாதி என்ற இடத்தில் வெற்று என எழுதுங்கள். மேற்கத்திய உலகில் இவ்வுணர்வு வந்துவிட்டது என்றார்.
நார்வே நாட்டின் மனிதநேய அமைப்பின் பொதுச் செயலர் கிருஷ்டி மெலி: பிற நாடுகளைப் பார்க்கையில் நார்வேயில் பெண்கள் நல்ல நிலையில் உள்ளனர். அங்கு அதிக அளவிலான பெண்கள் பல்கலைக்கழகங்களிலும், அரசியலிலும், தொழில் துறையிலும் அவர்களின் பங்களிப்பை காணமுடிகிறது.
எழுபதுகளில் சம ஊதியத்துக்காக போராடும் நிலை அங்கு இருந்தது. பெண்களுக்கு பொறுப்புகளைத் தர அஞ்சினர். முடிவெடுக்கும் இடங்களில் அவர்கள் அனுமதிக்கப்படவில்லை. இப்போது அனைத்தும் மாறிவிட்டது. தொடக்கத்தில் 300 உறுப்பினர்களுடன் தொடங்கப்பட்ட எங்கள் அமைப்பில், தற்போது 75,000 பேர் உள்ளனர்.
ஒவ்வொருவரும் தனித் தன்மை வாய்ந்தவர்களாக இருக்க வேண்டும். குழு விவாதம் நம்மை மேம்படுத்தும். நார்வேயில் சர்ச்சுகள் பெண்கள் சுதந்திரத்துக்கு எதிர்ப்புத் தெரிவிக்கின்றன என்றார்.
அனைத்துலக மனிதநேய நன்னெறிக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் லெவிஃபிராகல்: ஒவ்வொரு முறையும் இந்தியா வரும் போது நான் பல ஆச்சர்யங்களை எதிர்கொள்கிறேன். தற்போது சென்னை வந்தபோது பல இடங்களில் கடவுள் இல்லை என்ற வாசகங்களை காணமுடிந்தது. இதனை என்னால் நம்ப முடியவில்லை. இப் பல்கலை.யில் எங்கும் இயற்கையை காண முடிகிறது. நமது நல் வாழ்கைக்கு சுற்றுச்சூழல் மிகவும் அவசியம். மனித நேயம் என்பது இயற்கையையும் பாதுகாப்பதே என்றார்.
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி: இங்கு நிலவிய மூடநம்பிக்கை, சமயக் கொடுமைகளிலிருந்து மக்களை விடுவிக்கவே சுயமரியாதை இயக்கம் தொடங்கப்பட்டது. அறிவியலைப் படிப்பது மட்டுமல்லாமல், அறிவியல் உணர்வை வளர்த்துக் கொள்வது அவசியம் என்றார் பெரியார். பள்ளியில் கோள்கள் குறித்த அறிவியலைப் பயிற்றுவிக்கும் ஆசிரியர், வீட்டுக்குச் சென்றவுடன் அதே கோள்களான ராகு என்கிற பாம்பு சந்திரனையோ, சூரியனையோ முழுங்குவதால்தான் கிரகணங்கள் ஏற்படுகிறது என அஞ்சி புனித நிராடி அதனைப் போக்கிக் கொள்கிறார். இதுபோன்று இருவேறு வாழ்க்கை வாழக்கூடாது. பல நாட்டைச் சேர்ந்த பகுத்தறிவாளர்கள் இங்கு வந்துள்ளனர். பெரியார் உலகமயமாகி வருகிறார் என்பதோடு அவரது கருத்துக்களுக்கு எல்லை இல்லை என்பதையே இது உணர்த்துகிறது.
நாமும் வாழ வேண்டும், பிறரையும் வாழவிட வேண்டும். அது பகுத்தறிவு நிலையில் அமைய வேண்டும் என்றார் வீரமணி. முன்னதாக துணைவேந்தர் நல். ராமச்சந்திரன் வரவேற்றார். பெரியார் சிந்தனை மைய இயக்குநர் பேராசிரியர் பழனி அரங்கசாமி நன்றி கூறினார்.