திருச்சி, ஜன. 8: பெரியாரின் அன்பு வழி, அறவழியே சமூக மாற்றத்தை உருவாக்கும் என்றார் மாநிலங்களவை உறுப்பினர் கவிஞர் கனிமொழி.
திருச்சியில் நடந்துவரும் உலக நாத்திகர் மாநாட்டின் 2 ஆம் நாளான சனிக்கிழமை இரவு நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
"தலைவர் கருணாநிதியின் நாத்திக வாரிசு என்று அழைத்தார்கள். வாரிசு அரசியல் என்ற பேச்சுக்கிடையே இங்கு என்னை நாத்திக வாரிசு என்றழைத்ததைப் பெருமையாகக் கருதுகிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது.
நானும் பெரியார் திடலில் தீச்சட்டி ஏந்தியிருக்கிறேன். சட்டியின் அடியில் தானியங்களைப் போட்டு வைத்திருப்பதால், சட்டியை ஏந்தும்போது தாங்கு அளவுக்குத்தான் சூடு இருக்கும். இதுதான் தொழில்நுட்பம். மக்களை ஏமாற்றுகின்றனர்.
அறிவுத் தேடல் இருக்க வேண்டும் என்பதுதான் நாத்திகம். ஆனால், மாற்றுக் கருத்தை கண்மூடித்தனமாக நிராகரிப்பதுதான் மதம். என்ன செய்ய வேண்டும்? என்ன படைக்க வேண்டும்? என்ன சிந்திக்க வேண்டும்? என்ன படிக்க வேண்டும்? என மக்களுக்குச் சொல்லும் சர்வாதிகாரிகளாக மதத் தலைவர்கள் மாறிவிட்டிருக்கின்றனர்.
நாம் இன்னமும் குறியீடுகளைப் பற்றித்தான் பேசிக் கொண்டிருக்கிறோம். அதைத் தாண்டி கருத்து இருக்கிறது. மாற்றுக் கருத்துக்கு இப்போது கடுமையான எதிர்ப்புகள் உருவாகியிருக்கின்றன. பெரியார் காலத்தில்கூட இந்தளவுக்கு அச்சுறுத்தல்கள் இல்லை. படைப்புத் தளங்கள் சுருங்கி வருகின்றன. "தலிபானைஷேசன்' நடைபெற்று வருகிறது.
நமக்கான பிரச்னைகளை நாம் உணர்ந்து கொண்டால்தான், அவற்றைத் தீர்க்க முடியும். ஆனால், நமக்கான பிரச்னைகளைப் பற்றிப் பேசக் கூடாது, விவாதிக்கக் கூடாது. கடவுள் தீர்த்து வைப்பார், அடுத்த பிறவியிலாவது பிரச்னைகள் தீரும் என்பதுதான் ஆத்திகம். அதுதான் அவர்களுக்கு வசதியும்கூட. எதிர்த்துக் கேள்வி கேட்க ஆள் இருக்காது. அதிலும் நாம் புரிதலை ஏற்படுத்திக் கொள்ளாமல், நம்மை நாம் மாற்றிக் கொள்கிறோம்.
நகர்ப்புறங்களில் நவீன தீண்டாமை புகுந்திருக்கிறது. வீடு வாடகைக்கு கொடுப்பதிலும், திருமண மண்டபங்களை வாடகைக்குக் கொடுப்பதிலும் சைவ உணவு மட்டுமே சமைப்பவர்களுக்கு மட்டுமே கொடுக்கப்படுகிறது. அதில் அந்த உரிமையாளர்கள் அசைவம் சாப்பிடுபவர்களாக இருப்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று. அதன் பின்னால் இருக்கும் அரசியலை நாம் புரிந்து கொள்வதில்லை. அங்கும் அமைதி காக்கிறோம்.
ஒவ்வொரு நாளும் நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அதற்காகச் சிந்திக்க வேண்டும். ஜாதி, மதத்தை விட்டு திருமணம் செய்து கொள்வது பெரிய துரோகம் என்று கருதப்படுகிறது. அதையொட்டி கெüரவக் கொலைகளும் நடைபெறுகின்றன.
அன்பு, சுயமரியாதை இவற்றைப் படிப்பிக்கும் பெரியார் வழிதான் மாற்றத்துக்கு வழிவகுக்கும். அதுதான் அன்பு வழி, அறவழி' என்றார் கனிமொழி.
பொதுக் கூட்டத்துக்கு, திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி தலைமை வகித்தார். திராவிட இயக்கத் தமிழர் பேரவையின் பொதுச் செயலர் சுப. வீரபாண்டியன், திராவிடர் கழகப் பிரசாரச் செயலர் வழக்குரைஞர் அருள்மொழி உள்ளிட்டோர் பேசினர். திராவிடர் கழகப் பொருளாளர் கோ. சாமிதுரை வரவேற்றார். மாவட்டத் தலைவர் மு. சேகர் நன்றி கூறினார்.
முன்னதாக, மூடநம்பிக்கை ஒழிப்புப் பேரணி சிந்தாமணி அண்ணா சிலை அருகேயிருந்து தொடங்கியது. திராவிடர் கழகத் துணைப் பொதுச் செயலர் இரா. குணசேகரன் பேரணியைத் தொடங்கி
வைத்தார்.