திருவெறும்பூர் அருகே அனுமதியின்றி மணல் அள்ளும் மாட்டு வண்டிகள்!

திருவெறும்பூர், ஜன. 12: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே அரசு அனுமதியின்றி  காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருவதைத் தடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்
Updated on
1 min read

திருவெறும்பூர், ஜன. 12: திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே அரசு அனுமதியின்றி  காவிரி ஆற்றில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்பட்டு வருவதைத் தடுக்க வேண்டும் என அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.

  திருவெறும்பூர் ஒன்றியத்துக்கு உள்பட்ட கல்லணை சாலையில் பனையக்குறிச்சி,  குவளக்குடி, கீழமுல்லக்குடி, ஒட்டக்குடி, கிளியூர், வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம் உள்ளிட்ட கிராமங்கள் காவிரி கரையோரம் உள்ளன.

  இந்தப் பகுதியில் உள்ள மக்கள் தங்களது மாட்டு வண்டிகள் மூலம் காவிரி ஆற்றில் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வருகின்றனர். இவ்வாறு அள்ளப்படும் மணல் கல்லணை சாலையில் கொட்டி வைக்கப்பட்டு, அங்கிருந்து லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் அனுப்பப்படுகிறது. இதனால், சாலையில் புழுதி பறப்பதால், கல்லணைக்கு சுற்றுலா வரும் பயணிகள், பள்ளிக் குழந்தைகள், இரு சக்கர வாகன ஓட்டிகள் பெரும் அவதிக்கு உள்ளாகின்றனர்.  இதுகுறித்து கீழமுல்லக்குடி கிராம மக்கள் கூறியது:

  எங்கள் கிராமத்தைச் சேர்ந்த சிலர் மாட்டு வண்டிகள் மூலம் அரசு அனுமதியின்றி மணல் அள்ளி வருகின்றனர். இவ்வாறு அள்ளப்படும் மணல் சாலையோரத்தில் கொட்டப்பட்டு, சேமிக்கப்படுகிறது. இதனால், சாலையில் செல்லும் வாகனங்களுக்கு இடையூறு ஏற்படுவதுடன், விபத்தும் நிகழ்ந்துள்ளது.

   கடந்த வாரம் கல்லணை சாலையைச் சீரமைக்க வலியுறுத்தியும், தனியார் பேருந்துகள் சரிவர இயக்கப்படாததைக் கண்டித்தும் சாலை மறியலில்  ஈடுபட்டோம். இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த மறியலைத் தொடர்ந்து, அரசு அதிகாரிகள், போலீஸôர், போக்குவரத்து மண்டல மேலாளர் என அனைவரும் எங்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையும் சுமுகமாக முடிந்தது.

 இந்நிலையில், மறுநாள் எங்கள் பகுதியில் காவிரி ஆற்றில் மணல் அள்ளிக் கொண்டிருந்த மாட்டு வண்டிகளை மட்டும் திருவெறும்பூர் போலீஸôர் பிடித்துச் சென்றனர். இது சரியானதுதான் என்றாலும், வேங்கூர், அரசங்குடி, நடராஜபுரம், பனையபுரம், கிளியூர் உள்ளிட்ட பகுதிகளில் மாட்டு வண்டிகள் மூலம் மணல் அள்ளப்படுவதைத் தடுக்க போலீஸôர் எந்தவித நடவடிக்கையும் எடுக்க வில்லை.

   இந்தச் செயல் எங்கள் பகுதியினரை பழிவாங்கும் செயலாகவே கருதத் தோன்றுகிறது என்றனர் அவர்கள்.

  அரசு அனுமதியின்றி மாட்டு வண்டிகள் மூலம் அள்ளப்படும் மணல்  சாலையோரத்தில் கொட்டி வைக்கப்பட்டு, பின்னர் லாரிகள் மூலம் வெளி மாநிலங்களுக்கும், பிற மாவட்டங்களுக்கும் கடத்தப்படுவதைத் தடுக்க மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com