பிற்பட்டோர் நல விடுதிகளில் குறைகள் களையப்படுமா?

அரியலூர், ஜன. 23: தமிழகத்தில் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நல விடுதிகளில் காலியாக உள்ள காப்பாளர்கள் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்றும், விடுதிகளில் நிலவும் குறைகளைப் போக்க வேண்டும்
Updated on
2 min read

அரியலூர், ஜன. 23: தமிழகத்தில் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நல விடுதிகளில் காலியாக உள்ள காப்பாளர்கள் பணியிடங்களை விரைவாக நிரப்ப வேண்டும் என்றும், விடுதிகளில் நிலவும் குறைகளைப் போக்க வேண்டும் என்றும் விடுதி மாணவ, மாணவிகள் வலியுறுத்துகின்றனர்.

  தமிழகத்தில் பள்ளி, கல்லூரிகளில் பயிலும் ஏழை மாணவ, மாணவிகள்  விடுதிகளில் தங்கிப் பயிலும் வகையில், அரசு சார்பில் மாநிலத்தில் பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத் துறை சார்பிலும், ஆதிதிராவிடர் நலத் துறை சார்பிலும் விடுதிகள் கட்டப்பட்டு, அந்த விடுதிகளில் மாணவ, மாணவிகள் ஆண்டுதோறும் சேர்க்கப்பட்டு வருகின்றனர்.

  மாநில பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நலத் துறை சார்பில்,  தமிழகம் முழுவதும் சுமார் 1200 பள்ளி, கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி,  தொழில்பயிற்சி நிலைய மாணவ, மாணவிகளுக்கான விடுதிகள் செயல்பட்டு வருகின்றன.

  பள்ளி விடுதிகளில் 4 ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவ, மாணவிகளும், கல்லூரி விடுதிகளில் இளநிலை, முதுநிலைப் பயிலும் மாணவ, மாணவிகளும் சேர்க்கப்படுகின்றனர்.

  இந்த விடுதிகளைக் கண்காணிக்க பட்டதாரி ஆசிரியர் கல்வித் தகுதி பெற்றவர் காப்பாளராக நியமிக்கப்படுகிறார். மேலும், 2 சமையலர்கள், ஒரு பாதுகாவலர் என்ற நிலையில் விடுதிக்கு ஆள்கள் பணியமர்த்தப்படுகின்றனர்.

  பள்ளி விடுதிகளில் மாணவர் ஒருவருக்கு மாதத்துக்கு ரூ. 450 உணவு செலவினத் தொகையாகவும், கல்லூரி விடுதிகளில் மாணவர் ஒருவருக்கு ரூ. 550 உணவு செலவினத் தொகையாகவும் வழங்கப்படுகிறது. மாதத்தில் 12 முட்டை, 2 முறை கோழிக்கறி, 2 முறை ஆட்டுக்கறி, வாரத்தில் 4 நாள்களுக்கு இட்லி உள்ளிட்டவை டிபனாகவும்,  சாம்பார், ரசத்துடன் மதிய உணவும் வழங்கப்பட வேண்டும்.

  ஆனால், தற்போதைய விலைவாசி உயர்வால் உணவுப் பொருள்களின் விலை  தாறுமாக உயர்ந்துள்ளதால், அரசு வழங்கும் உணவு செலவினத் தொகையைக்  கொண்டு மாணவ, மாணவிகளுக்கு எப்படி உணவு தயார் செய்து வழங்குவது  என்று தெரியாமல் தவித்து வருகிறோம். எனவே, தற்போது வழங்கும் செலவினத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்கின்றனர் பிற்பட்டோர் நலத் துறை  விடுதிக் காப்பாளர்கள்.

  காலிப் பணியிடங்களால் அவதி: மாநிலத்தில் உள்ள பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்பட்டோர் நல விடுதிகள் சுமார் 1200 இருந்தாலும், இவற்றில் சுமார் 500 விடுதிகளுக்கு காப்பாளர்கள் இல்லை. கடந்த நான்கரை ஆண்டுகளுக்கு மேலாக  இந்த நிலைதான் நீடிக்கிறது. மேலும், ஒரு விடுதிக் காப்பாளர் குறைந்தது 4  அல்லது 5 விடுதிகளையும் சேர்த்துப் பார்க்க வேண்டியுள்ளது. இதனால், பணிச்சுமை அதிகமாக உள்ளது. எனவே, காலியாக உள்ள காப்பாளர் பணியிடங்களை விரைவாக நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்கின்றனர் பிற்பட்டோர் நல விடுதிக் காப்பாளர்கள்.

   "பட்டதாரி ஆசிரியருக்கு இணையான ஊதியம் வழங்கினாலும், அவர்களுக்கு  உள்ளது போன்ற பதவி உயர்வு எதுவும் எங்களுக்கு இல்லை. பட்டதாரி ஆசிரியராகப் பணியில் சேருபவர் படிப்படியாக உயர்ந்து பள்ளிக் கல்வித் துறையின் இயக்குநர் நிலை வரை பதவி உயர்வு பெறலாம்.

ஆனால், விடுதிக் காப்பாளராகப் பணியில் சேர்ந்தால் அவர் காப்பாளராகவே பணி ஓய்வு பெற வேண்டிய  நிலைதான் தொடர்ந்து இருந்து வருகிறது.

எனவே, எங்களுக்கும் படிப்படியான  பதவி உயர்வு நிலையை வழங்க வேண்டும்' என்கின்றனர் விடுதிக் காப்பாளர்கள்.

  கழிப்பறைகளைச் சுத்தம் செய்ய ஆள்கள் இல்லை: ஒவ்வொரு விடுதியிலும் குறைந்தது 8 கழிப்பறைகள், 6 குளியலறைகள் வரை உள்ளன. ஆனால், இந்த விடுதிக் கழிப்பறைகளைச் சுத்தம் செய்வதற்கு ஆள்கள் இல்லை என்பதுதான்  தற்போதைய நிலை. செலவினத் தொகையில் ரூ. 20 கொடுத்து கழிப்பறைகளைச் சுத்தம் செய்து கொள்ளுமாறு கூறினாலும், இன்றைய நிலையில் ஒரு கழிப்பறையைச் சுத்தம் செய்ய ரூ. 50 கூலி கேட்கும் நிலையில், மொத்தக் கழிப்பறைகளையும் சுத்தம் செய்ய ரூ. 20 மட்டும் வழங்கினால் யார்தான் வேலைக்கு வருவார்கள். எனவே, ஒவ்வொரு விடுதியிலும் துப்புரவுப் பணியாளர் ஒருவரை நிரந்தரமாக பணியமர்த்தினால்தான் விடுதிகள் நன்றாக இருக்கும் என்கின்றனர் விடுதிக் காப்பாளர்கள்.   விடுதிகளில் உள்ள ஜன்னல்கள், குடிநீர்க் குழாய்கள், மின் இணைப்புக்  குழாய்கள், மின்சார வயர்கள் என எவை பழுதடைந்தாலும் அவற்றைப்  பராமரித்துத் தரும் பொறுப்பு பொதுப் பணித் துறையினரின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. பல விடுதிகளில் குடிநீர்க் குழாய்கள் பல உடைந்த நிலையிலும், மின்சார வயர்கள் பழுதடைந்த நிலையிலும் உள்ளன.

எனவே, இவற்றையெல்லாம் சரிசெய்வதற்கான நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் என்கின்றனர் விடுதிக் காப்பாளர்கள் மற்றும் மாணவர்கள்.

  இதேபோல, 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை விடுதிக்கு சுண்ணாம்பு அடித்தல் பணியை மேற்கொள்ள வேண்டும். ஆனால், பல விடுதிகளுக்கு இந்தப் பணி பல ஆண்டுகளாக மேற்கொள்ளப்படாமல் உள்ளது என்ற குற்றச்சாட்டும் பொதுவாக நிலவி வருகிறது.   வீட்டுக்குச் சென்று வந்து படிக்க இயலாத நிலையில்தான் ஏழை மாணவ,  மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கான விடுதிகளில் தங்கிப் பயில்கின்றனர். ஆனால், அவர்களுக்கான விடுதிகளில் நிலவி வரும் குறைபாடுகளைக் களைய வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com