புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலம் விரைவில் திறப்பு

அரியலூர், மே 22: அரியலூர் நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கட்டப்பட்ட புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலம் போக்குவரத்துக்காக ஜுன் மாதத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்ப
Updated on
2 min read

அரியலூர், மே 22: அரியலூர் நகரில் நிலவி வரும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் கட்டப்பட்ட புறவழிச் சாலை ரயில்வே மேம்பாலம் போக்குவரத்துக்காக ஜுன் மாதத்தில் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    தமிழ்நாடு சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், 11 மாவட்டங்களை இணைக்கும் வகையில் திருவண்ணாமலையிலிருந்து, நாகப்பட்டினம் வரையிலான 750 கி.மீ. தொலைவுச் சாலை ரூ. 2160 கோடியில் சீரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.

   இதில் அரியலூர்- ஜயங்கொண்டம்- அணைக்கரை- விருத்தாசலம் வரையிலான சாலையை அகலப்படுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது, பெரம்பலூரிலிருந்து, அரியலூர் நகருக்குள் கனரக வாகனங்கள் வராமல் இருக்கவும், அரியலூர் நகரில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் புறவழிச் சாலை அமைக்கத் திட்டமிடப்பட்டது.

   அதற்காக 22 ஹெக்டேர் நிலம் கையகப்படுத்தப்பட்டு கடந்த 2006 ஆம் ஆண்டில் பணிகள் தொடங்கப்பட்டு இப்போது முடிக்கப்பட்டுள்ளன.

   இந்த புறவழிச் சாலையில் அல்லி நகரம்- எருத்துக்காரன்பட்டி சாலைக்கு நடுவில் ரூ. 4.70 கோடியில் ரயில்வே மேம்பாலம் அமைக்கவும் திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டன.  

  இதையடுத்து, கடந்த பிப்ரவரி மாதத்தில் ரயிவே பாலத்தின் தாங்கு தூண்கள் மீது இணைப்புக் கட்டைகள் (காரிடர்) இணைக்கும் பணி தொடங்கியது.  

   சுமார் 30 மீட்டர் நீளமுள்ள ஒவ்வொரு இணைப்புக் கட்டைகளும் நவீன கிரேன் இயந்திரங்கள் மூலம் பாலத்தில் வைக்கப்பட்டன.

  இந்தப் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்ட பின்னர் தடுப்புக்கட்டைகளுக்கு நடுவில் ரப்பர் கட்டைகளை வைத்து கான்கிரீட் பூசும் பணியும் மேற்கொள்ளப்பட்டது.

   இதுபோல, பாலத்தின் இரு பகுதியிலும் பாதசாரிகள் நடந்து செல்லும் வகையில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன.

   இப்போது, ரயில்வே மேம்பாலத்திற்கான பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு, பூச்சுகள் சரியாக இணைந்துள்ளனவா என்பதை கண்காணிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

    இந்தப் பணி முடிவடைந்தவுடன் பாலத்தின் தாங்குத் திறனைக் கண்டறியும் வகையில் சோதனை ஓட்டம் நடத்தப்படும். பின்னர், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஒப்புதல் அளித்ததும் போக்குவரத்துக்காக மேம்பாலம் திறக்கப்படும் என அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

   போக்குவரத்து நெரிசல் குறையும்: அரியலூர், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வெட்டியெடுக்கப்படும் சுண்ணாம்புக் கல்கள், அரியலூர் பகுதிகளில் உள்ள சிமென்ட் தொழில்சாலைகளுக்கும், வெளிப் பகுதிகளிலுள்ள சிமென்ட் தொழில்சாலைகளுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

   ஆண்டுக்கு 2.19 லட்சம் டன் சுண்ணாம்புக் கல்கள் வெட்டியெடுக்கப்பட்டு கனரக வாகனங்களில் எடுத்து செல்லப்படுகின்றன. மேலும், சிமென்ட் உற்பத்திக்குத் தேவையான சாம்பல் உள்ளிட்ட பொருள்கள் மற்றப் பகுதிகளிலிருந்து கொண்டு வரப்படுகின்றன.    இவ்வாறு சுண்ணாம்புக் கல்கள், சாம்பல் உள்ளிட்ட பொருள்களைக் கொண்டு வரும் கனரக வாகனங்கள் அனைத்தும் இப்போது அரியலூர் நகருக்குள் வந்துதான் செல்கின்றன. சாதாரண போக்குவரத்துக்காக போடப்பட்ட சாலைகளில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட கூடுதல் சுண்ணாம்புடன் வரும் கனரக வாகனங்களால் அரியலூர் சாலைகள் அனைத்தும் சேதமடைந்த நிலையில் உள்ளன.

   மேலும், பேருந்து, கனரக வாகனங்கள் அனைத்தும் அரியலூருக்கு வந்து செல்வதால், எந்நேரமும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.

   இப்போது, புறவழிச் சாலையில் ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், அந்தப் பாலம் போக்குவரத்துக்காகத் திறந்துவிடப்பட்டால் கனரக வாகனங்கள் அனைத்தும் அதன் வழியாகச் சென்று விடும்.

  இதனால், அரியலூர் நகரில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்கு நிரந்தர தீர்வு ஏற்படும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com