அரியலூர், பிப். 2: அரியலூர் மாவட்டத்தில் நெல் அறுவடைப் பணிக்கு போதிய ஆள்கள் கிடைக்காததால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், விவசாயப் பணிகள் நடைபெறும் காலத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகளை நிறுத்திவைக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் திருமானூர், தா.பழூர், ஆண்டிமடம், ஜயங்கொண்டம் ஆகிய 4 ஒன்றியங்களில் முழுமையாகவும், அரியலூர், செந்துறை ஒன்றியங்களில் குறிப்பிட்ட சில பகுதிகளிலும் நெல் சாகுபடி நடைபெற்று வருகிறது.
இவற்றில் திருமானூர், தா.பழூர் பகுதிகள் மாவட்டத்தின் டெல்டா பகுதிகள் என அழைக்கப்படுகின்றன. தா.பழூரின் சில பகுதிகள், ஜயங்கொண்டம் பகுதிகளில் பொன்னாற்றுப் பாசனத்தின் மூலமாகவும், ஆண்டிமடம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் கிணற்றுப் பாசனத்தின் மூலமாகவும் சாகுபடி பணிகள் நடைபெற்று வருகின்றன.
மாவட்டத்தில் 2010-11, 2011-12 ஆம் ஆண்டுகளில் தலா 32,000 ஹெக்டேரில் நெல் சாகுபடி இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 2010-11 ஆம் ஆண்டில் 23,836 ஹெக்டேர் சாகுபடி செய்யப்பட்டது.
இதுபோல, 2011-12 ஆம் ஆண்டில் இதுவரை 24,849 ஹெக்டேரில் நெல் சாகுபடி மேற்கொள்ளப்பட்டுள்ளது. வடகிழக்குப் பருவமழை காலமான அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலத்தில் சராசரியாக மாவட்டத்தில் 485 மி.மீ. மழை பெய்தது.
2010 ஆம் ஆண்டைக் காட்டிலும், 2011 ஆம் ஆண்டில் மழை சற்று அதிகமாகவே பெய்ததால் மகிழ்ச்சியடைந்த விவசாயிகள், சாகுபடிக்கான பணிகளைத் தீவிரமாக மேற்கொண்டனர்.
பருவ மழையின் காரணமாக விவசாயிகளின் நெல் சாகுபடியும் நன்றாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்த நிலையில், தற்போது அறுவடைக்குத் தயாராக உள்ள நெல் மணிகளை அறுப்பதற்கு ஆள்கள் பற்றாக்குறை நிலவுவதால், விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
சில பகுதிகளில் இயந்திரங்களின் மூலம் நெல் அறுவடைப் பணிகள் மேற்கொள்ளப்பட்டாலும், அறுவடைக்குப் பின்னர், நெல்லின் ஈரப் பதம் அதிகரிப்பது, வைக்கோல் வீணாவது போன்ற பாதிப்புகள் ஏற்படுவதாக விவசாயிகள் கூறுகின்றனர்.
மேலும், மாவட்டத்தில் இயந்திரங்களின் மூலம் அறுவடை செய்வதற்குப் போதிய இயந்திரங்கள் இல்லாததால், பக்கத்து மாவட்டங்களிலிருந்து நெல் அறுவடை இயந்திரங்களைக் கொண்டு வர வேண்டிய நிலை உள்ளது. இதனால், இயந்திரம் வரும் வரை காத்திருக்க வேண்டியுள்ளது என்கின்றனர் விவசாயிகள்.
100 நாள்கள் வேலை திட்டத்தால் பாதிப்பு: தற்போது மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டப் பணிகள் நடைபெறுவதால், நெல் அறுவடைப் பணிக்கு வருவதைக் காட்டிலும், அந்தத் திட்டப் பணிக்கு பலரும் சென்று விடுகின்றனர். இதனால், நெல் அறுவடைப் பணிகள் பாதிக்கப்படுகின்றன. விவசாயம் நடைபெறும் காலங்களில் இந்தத் திட்டப் பணிகளை நிறுத்தி வைக்க வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தும், இதுவரை நடவடிக்கை இல்லை.
ஆள்கள் பற்றாக்குறை காரணமாக, விவசாயிகளுக்குள் பேசி முடிவெடுத்து, எங்கள் நிலத்தில் மற்றவர்களுடன் இணைந்து அறுவடைப் பணிகளை மேற்கொள்வது, அவர்கள் நிலத்தில் நாங்கள் இணைந்து அறுவடையை மேற்கொள்வது என்று தாற்காலிகமாக நெல் அறுவடை செய்யும் பணியை தொடங்கியிருக்கிறோம் என்கிறார் விளந்தை உழவர் ஆய்வு மன்றத் தலைவர் ஜயச்சந்திரன்.
தொடர்ச்சியற்ற மும்முனை மின்சாரம்: முன்பெல்லாம் இரவு நேரங்களில் தொடர்ச்சியாக மும்முனை மின்சாரம் இருந்து வந்ததால், விவசாயிகள் எவ்வித பிரச்னையும் இல்லாமல் வயலுக்கு தண்ணீர் பாய்ச்சும் பணியை மேற்கொண்டனர். ஆனால், மின் தட்டுப்பாடு காரணமாக, விவசாயிகளுக்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் தற்போது தொடர்ச்சியாக வழங்கப்படுவதில்லை. பகலில் 3 மணி நேரமும், இரவில் 3 மணி நேரமும் மும்முனை மின்சாரம் வழங்கப்படுவதாக மின் வாரியம் அறிவிக்கிறது. ஆனால், அவ்வாறு வழங்கப்படுவதில்லை என்கிறார் ஜயச்சந்திரன்.
எனவே, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாயப் பணிகள் நடைபெறும் காலத்தில் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை நிறுத்திவைக்க வேண்டும். தொடர்ச்சியான மும்முனை மின்சாரம் வழங்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.