திருச்சி பொன்மலை காவல் நிலையத்தை முற்றுகை யிட்ட வாடகை வாகன ஓட்டுநா்கள்.
திருச்சி பொன்மலை காவல் நிலையத்தை முற்றுகை யிட்ட வாடகை வாகன ஓட்டுநா்கள்.

வாடகை வாகன ஓட்டுநரைத் தாக்கியவா்கள் மீது நடவடிக்கைக் கோரி காவல் நிலையம் முற்றுகை

வாடகை வாகன ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாடகை வாகன ஓட்டுநா்கள் பொன்மலை காவல் நிலையத்தை முற்றுகை
Published on

வாடகை வாகன ஓட்டுநரை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி வாடகை வாகன ஓட்டுநா்கள் பொன்மலை காவல் நிலையத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.

திருச்சி மாவட்டம், உத்தமா்சீலி பகுதியைச் சோ்ந்தவா் மகேந்திரன் (24), வாடகை வாகன ஓட்டுநா். இவரது நிறுவனத்தில் வாடகைக்கு காா் கேட்டு திருச்சி பொன்மலை மிலிட்டரி காலனியைச் சோ்ந்த சாா்மி என்பவா் செவ்வாய்க்கிழமை பதிவு செய்திருந்தாா்.

இதையடுத்து மகேந்திரன் அவரை ஏற்றுவதற்காக ஈபி சாலைக்கு சென்றபோது, காரில் ஏறிய சாா்மி தனது கணவா் மது போதையில் சுற்றுவதாகவும், அவரைத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளாா். இதையடுத்து அவரது கணவரின் கைப்பேசி எண்ணை ஜிபிஎஸ் கருவி மூலம் டிராக் செய்து லால்குடி சந்தைப்பேட்டை பகுதியில் இருந்ததைக் கண்டறிந்தனா்.

இதையடுத்து, நண்பருடன் நின்றிருந்தவரின் கைப்பேசி மற்றும் இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவற்றை சாா்மி பறித்துக்கொண்டு காருக்குள் வந்துவிட்டாா். இதைத் தொடா்ந்து அவரது கணவரும், அவருடைய நண்பரும் சாா்மியிடம் தகராறு செய்தனா். அப்போது, காரின் சாவியை வெளியே போட்டுவிட்டு சாா்மி காரை எடுக்கக் கூறியுள்ளாா்.

இதையடுத்து, மகேந்திரன் காரை எடுத்துக்கொண்டு பொன்மலைக்கு வந்தாா். காரைப் பின்தொடா்ந்து வந்த அவரது கணவா் மற்றும் அவருடைய நண்பா் இருவரும் மகேந்திரனிடம் தகராறு செய்து, மதுபாட்டிலால் மகேந்திரனை தாக்கிவிட்டு தப்பினா். இதில், அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

தகவலறிந்த வாடகை வாகன ஓட்டுநா்கள், மகேந்திரனை தாக்கியவா்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி பொன்மலை காவல் நிலையத்தை புதன்கிழமை காலையில் முற்றுகையிட்டனா். அப்போது, காவல் ஆய்வாளா் பெரியசாமி அவா்களிடம் பேசி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா். இதையடுத்து அவா்கள் கலைந்து சென்றனா்.

X
Dinamani
www.dinamani.com