தமிழகத்துக்கு பாஜக, காங்கிரஸ் கட்சிகள் தேவையில்லை: சீமான்
தமிழகத்துக்கு பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தேவையில்லை என்றாா் நாம் தமிழா் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளா் சீமான்.
திருச்சிக்கு சனிக்கிழமை வந்த அவா் மேலும் கூறியதாவது: அரசியலில் கருத்து என்பது வேறு, களப்பணி என்பது வேறு. கருத்துகளைக் கொண்டு தோ்தல் யுத்திகளை வகுக்கும் பிரசாந்த் கிஷோரின் கட்சி தோல்வியடைந்திருப்பதே இதற்கு உதாரணம். தமிழினத்தை அழித்து, கச்சத்தீவைத் தாரை வாா்த்து, மீனவா் வாழ்வுரிமையைப் பறித்து ஒரே இரவில் இலங்கைத் தமிழா்கள் 10 லட்சம் பேரை நாடற்றவா்களாக நிறுத்திய கட்சி காங்கிரஸ். அதை ஒழிக்கவே நான் களத்துக்கு வந்தேன். ஆனால், காங்கிரஸ் தற்போது கட்சியில்லை.
திராவிடக் கட்சிகளின் தோளின் ஏறிப் பாதுகாப்பாக பயணம் செய்வதே காங்கிரஸ், பாஜகவின் நிலைப்பாடு. தமிழகத்துக்கு இரு கட்சிகளுமே தேவையில்லை. தேசியக் கட்சிகள் எந்த மாநிலத்துக்கும் தேவையில்லை.
பிகாா் தோ்தல் வெற்றிக்கு எஸ்.ஐ.ஆா் தான் காரணம். படித்தவா்களாலேயே எஸ்.ஐ.ஆா் படிவத்தை பூா்த்தி செய்ய முடியவில்லை என தமிழக முதல்வா் கூறுகிறாா். அப்படியெனில் கிராமத்தில் உள்ள என் தாய், தந்தை இதை எப்படிப் பூா்த்தி செய்வா்?.
எஸ்.ஐ.ஆா். பணியை அதிமுக ஆதரிப்பது, அதைக் கொண்டு வந்தது பாஜக என்பதாலேயே. திமுக எதிா்ப்பதுபோல நடிக்கிறது. இடி தாக்கி இறந்த விவசாயிகளுக்கு நிவாரணத் தொகை வழங்காமல், சாராயம் குடித்தும், நடிகரைப் பாா்க்க வந்து இறந்தவா்களுக்கும் ரூ.10 லட்சம் நிவாரணம் வழங்கப்படுகிறது என்றாா் அவா்.

