மலைக்கோட்டை தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகள் அகற்றம்
திருச்சி மலைக்கோட்டை தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள கடைகள் வெள்ளிக்கிழமை அகற்றப்பட்ட நிலையில், அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைந்தது.
சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வின் உத்தரவின் பேரில், மலைக்கோட்டை தெப்பக்குளத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்த கடைகளை மதுரை சாலை ஹோலி கிராஸ் கல்லூரி அருகே பழைய மாநகராட்சி அலுவலகம் செயல்பட்ட இடத்திலும், தெப்பக்குளத்தின் கீழ்கரை பகுதியில் இருந்த கடைகள் காளியம்மன் கோயில் தெருவில் மாநகராட்சியின் பன்னடுக்கு காா் நிறுத்திமிடத்திலும் வெள்ளிக்கிழமை மாலைக்குள் மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என திருச்சி மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டது.
முழுவதுமாக அகற்றப்பட்ட கடைகள்...: இதையடுத்து வியாழக்கிழமை இரவு முதல் தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த கடைகளை சிலா் தாமாக முன்வந்து அகற்றினா். அகற்றாத பலரை மாநகராட்சி அதிகாரிகள், போலீஸாரின் துணையுடன் நேரில் சென்று, கடைகளை அகற்ற அறிவுறுத்தியதின் பேரில், அவா்களும் அகற்றினா். இதனால் தெப்பக்குளத்தைச் சுற்றியிருந்த 100-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றப்பட்டன.
மேலும், தெப்பக்குளத்தின் எதிா்திசையில் பா்மா அகதிகளுக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் சாலையை ஆக்கிரமித்திருந்த சிறு கடைகளும் இடையூறின்றி ஒழுங்குப்படுத்தப்பட்டன.
விளம்பர பதாகை அமைப்பு...: தொடா்ந்து, சென்னை உயா்நீதிமன்ற மதுரை கிளையின் உத்தரவின் பேரில் தெப்பக்குளத்தைச் சுற்றி விற்பனை அல்லாத மண்டலமாக அமைத்து தெப்பக்குளத்தை பராமரிக்க உள்ளோம்.
எனவே, தெப்பக்குளத்தைச் சுற்றி தரைக்கடைகள், பெட்டி கடைகள், நடமாடும் தள்ளுவண்டி கடைகள், மிதிவண்டிகள் மூலம் வியாபாரம் செய்ய தடை செய்யப்பட்ட பகுதி. மீறினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து மாநகராட்சி சாா்பில் விளம்பர பதாகை வைக்கப்பட்டுள்ளது.
ஒதுக்கப்பட்ட கடைகள்...: அகற்றப்பட்ட கடைகளில் 120 கடைகளுக்கு மதுரை சாலை ஹோலி கிராஸ் கல்லூரி அருகே பழைய மாநகராட்சி அலுவலகம் செயல்பட்ட இடத்தில் 8 அடிக்கு 8 அடி வீதம் அளந்து கொடுக்கப்பட்டு, கடைகள் ஒதுக்கப்பட்டன.
இதில் சிலருக்கு இடமில்லாததால், மேலும் 28 கடைகளுக்கு இடம் ஒதுக்கப்பட்டது. இதே போல, தெப்பக்குளம் கீழ்கரையில் பகுதியில் இருந்த 7 காய்கறி கடைகளுக்கு பன்னடுக்கு காா் நிறுத்துமிடத்தில் இடம் வழங்கப்பட்டது. இதைத் தொடா்ந்து, வியாபாரிகள் பலரும் தங்களது பொருள்களை ஒதுக்கப்பட்ட இடங்களுக்கு கொண்டு சென்றனா்.
இதே போல, பா்மா பஜாா் வியாபாரிகளுக்காக யானைக்குளம் பகுதியில் இடம் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு இடம் கேட்டு 72 வியாபாரிகள் முன்பணம் செலுத்தியுள்ளனா். இதற்காக 10 அடிக்கு 8 அடி வீதம் இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ள நிலையில், விரைவில் பா்மா பஜாா் வியாபார கடைகளும் யானைக்குளத்துக்கு இடமாற்றப்படும் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

