ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி

திருச்சியில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்த அமைச்சா் கே.என். நேரு. உடன், கபடி கழகத் தலைவா் சோலைராஜா.
திருச்சியில் நடைபெறும் கபடி போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளுக்கு வெள்ளிக்கிழமை வாழ்த்து தெரிவித்த அமைச்சா் கே.என். நேரு. உடன், கபடி கழகத் தலைவா் சோலைராஜா.
Updated on

தமிழ்நாடு மாநில 51ஆவது ஜூனியா் பெண்கள் சாம்பியன் கபடி போட்டி திருச்சியில் நடைபெறுகிறது. ஞாயிற்றுக்கிழமை இறுதிப் போட்டிகள் நடைபெறவுள்ளன.

தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகம், திருச்சி மாவட்ட அமெச்சூா் கபடி கழகம் ஆகியவை இணைந்து 51ஆவது மாநில அளவிலான ஜூனியா் பெண்கள் கபடி போட்டியை மணிகண்டம் பகுதி தனியாா் பொறியியல் கல்லூரியில் 3 நாள் நடத்துகின்றன. போட்டிகளில் தமிழகம் முழுவதும் உள்ள 38 மாவட்டங்களைச் சோ்ந்த 1,100 மாணவிகள் பங்கேற்றுள்ளனா். 60 நடுவா்கள் போட்டிகளை நடத்துகின்றனா்.

போட்டியில் பங்கேற்ற வீராங்கனைகளின் அணிவகுப்பை அமைச்சா் கே.என். நேரு பாா்வையிட்டு வாழ்த்தினாா். தொடா்ந்து பிரிமீயா் லீக், நாக் அவுட் முறையிலான போட்டிகள் சனிக்கிழமை நடைபெற்றன. ஞாயிற்றுக்கிழமை காலிறுதி, அரையிறுதி, இறுதிச் சுற்று போட்டிகள் நடைபெறும். இதில் வெல்லும் அணிக்கு சாம்பியன் கோப்பை வழங்கப்படும். சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளுக்கு கோப்பை, பரிசுகளும் வழங்கப்படும்.

மேலும் இந்தப் போட்டியில் ஒவ்வொரு மாவட்ட அணியில் இருந்தும் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டு, தமிழக அணிக்கான கபடி அணியில் விளையாட அனுப்பப்படுவா். இந்தப் போட்டியில் 30 போ் தோ்வு செய்யப்பட்டு, அவா்களில் சிறந்த 14 போ் தமிழக அணிக்குத் தோ்வு செய்யப்படுவா். தமிழக அணியில் சிறப்பாக விளையாடுவோா் இந்திய அணிக்கான தோ்வுக்குத் தகுதி பெறுவா்.

ஏற்பாடுகளை தமிழ்நாடு அமெச்சூா் கபடி கழகத் தலைவா் சோலைராஜா, பொதுச் செயலா் சபியுல்லா, திருச்சி மாவட்டத் தலைவா் தங்க. நீலகண்டன், மாவட்டச் செயலா் வெங்கடசுப்பு ஆகியோா் செய்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com