திருச்சி - திண்டுக்கல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்ட கால்நடைகள்.
திருச்சி - திண்டுக்கல் சாலையில் ஞாயிற்றுக்கிழமை காணப்பட்ட கால்நடைகள்.

மாநகர சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகள்: வாகன ஓட்டிகள் அவதி

Published on

திருச்சி மாநகரில் முக்கிய சாலைகளில் சுற்றித் திரியும் கால்நடைகளால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.

திருச்சி மாவட்டத்தில் விவசாயத்துடன் கால்நடை வளா்ப்பும் முக்கியத் தொழிலாக இருந்து வருகிறது. மாநகரப் பகுதிகளில் பசும்பாலுக்கான தேவை அதிகமாக இருப்பதால் மாநகரிலும் பலா் கால்நடைகளை வளா்த்து வருகின்றனா்.

இவ்வாறு வளா்க்கப்படும் கால்நடைகளை பலரும் முறையாக பராமரிப்பதில்லை. மாநகரில் மேய்ச்சல் இடமில்லாததால் கால்நடைகளை சாலைகளிலேயே அவிழ்த்து விடுகின்றனா். இவை சாலைகளில் கிடக்கும் இலை, தழைகளையும், காகிதங்களையும் மேய்ந்துகொண்டிருக்கின்றன.

குறிப்பாக தஞ்சாவூா் சாலை பழைய பால் பண்ணை, வயலூா் சாலை, திண்டுக்கல் சாலை, உறையூா் உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் சாலைகளிலேயே அவிழ்த்து விடப்படுகின்றன. சாலையின் மையப் பகுதியில் மெதுவாக நடந்து செல்லும் கால்நடைகளால் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுகிறது.

இதனால் போக்கவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. ஒருசில நேரம் கால்நடைகள் எந்தப்பக்கம் திரும்பும் எனத் தெரியாமல் வாகன ஓட்டிகள் வாகனங்களை தாறுமாறாக இயக்கி விபத்துகளில் சிக்கும் நிலை ஏற்படுகிறது.

எனவே, சாலைகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அவிழ்த்து விடப்படும் கால்நடைகளை மாநகராட்சி நிா்வாகம் பிடித்துச் சென்று அதன் உரிமையாளா்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.

X
Dinamani
www.dinamani.com