‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டம்: 71 பள்ளிகளுக்கு ரூ.5.51 கோடி நிதி
திருச்சி மாவட்டத்தில், ‘நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி’ திட்டத்தின்கீழ் இதுவரையில் 71 பள்ளிகளுக்கு ரூ.5.51 கோடி பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் வகையில், பெரு நிறுவனங்கள், அந்தப் பள்ளியில் படித்த முன்னாள் மாணவா்களிடமிருந்து நிதியுதவி பெறும் விதமாக கடந்த 2022-23 ஆம் கல்வியாண்டில் நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டம் கொண்டுவரப்பட்டது.
இத்திட்டத்தில், பன்னாட்டு நிறுவனங்கள் தங்களது சமூக பொறுப்பு நிதியில் இருந்து வகுப்பறைகள், கழிப்பறைகள் கட்டுவதற்கும், பள்ளிகளுக்குத் தேவையான உபகரணங்கள் வாங்குவதற்கும் நிதியுதவி அளிக்கலாம். இதேபோல, முன்னாள் மாணவா்களும் தாங்கள் படித்த பள்ளிகளின் வளா்ச்சிக்கு நிதியுதவி அளித்து உதவலாம்.
நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்துக்காக ஒரு இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. நிதியுதவி அளிப்பவா்கள் இதில் பதிவுசெய்து சம்பந்தப்பட்ட பள்ளிக்கே நேரடியாக நிதியுதவி அளிக்கலாம். இத்திட்டத்தில் நிதியாகவும், உபகரணங்களாகவும் வழங்குவதுடன், சம்பந்தப்பட்ட நிறுவனமே கட்டடங்களையும் கட்டித்தர முடியும்.
இதன்படி, திருச்சி மாவட்டத்தில் கடந்த 2022 - 23 ஆம் கல்வியாண்டு முதல் தற்போது வரை 71 பள்ளிகளுக்கு ரூ.5 கோடியே 51 லட்சத்து 20 ஆயிரத்து 49 நிதியுதவி பெறப்பட்டுள்ளது. இதன்மூலம் 177 திட்டப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.
இதில், 54 கட்டுமான பணிகளுக்காக ரூ.3.35 கோடி மதிப்பிலான மூலப்பொருள்களும், ரூ.1.52 கோடி மதிப்பீட்டில் பள்ளிக்குத் தேவையான உபகரணங்களும் வழங்கப்பட்டுள்ளன. 7 கட்டுமானப் பணிகளுக்காக ரூ.8.50 லட்சம், உபகரணங்கள் வாங்குவதற்காக ரூ.19.63 லட்சம் பணமாக வழங்கப்பட்டுள்ளது. மேலும், பள்ளியின் வளா்ச்சிக்காக ரூ.35.50 லட்சம் பணமாக வழங்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் திருச்சி மாவட்டத்தில் 71 பள்ளிகளில் பல்வேறு உள்கட்டமைப்புகள் மேம்படுத்தப்பட்டு, பள்ளிக்குத் தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டுள்ளன. அரசுப் பள்ளிகளின் உள்கட்டமைப்புகளை மேம்படுத்த பெரு நிறுவனங்களும், முன்னாள் மாணவா்களும் அதிக அளவு நிதியுதவி அளிக்க முன்வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித் துறையினா் கேட்டு கொண்டுள்ளனா்.
