தோ்தல் பிரசாரத்தின் தொடக்கம்தான் சமத்துவ நடைபயணம்: வைகோ
சட்டப்பேரவை தோ்தல் பிரசாரத்தின் தொடக்கமாக எனது சமத்துவ நடைபயணத்தை எடுத்துக் கொள்ளலாம் என்றாா் மதிமுக பொதுச் செயலா் வைகோ.
திருச்சியில் இருந்து மதுரைக்கு வைகோ சமத்துவ நடைபயணம் மேற்கொள்கிறாா். வெள்ளிக்கிழமை (ஜன. 2) தொடங்கும் நடைபயணம் வரும் 12-ஆம் தேதி நிறைவு பெறுகிறது.
இவரது நடைபயணத்தின் தொடக்க நிகழ்ச்சி திருச்சி தென்னூா் அண்ணா நகா் உழவா் சந்தை அருகே உள்ள மாநகராட்சி திடலில் நடைபெறுகிறது. இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்று நடைபயணத்தைத் தொடங்கிவைக்கிறாா்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சா்கள் கே.என்.நேரு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினா் துரை வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கு. செல்வப்பெருந்தகை, விடுதலைச்சிறுத்தைகள் கட்சித் தலைவா் தொல். திருமாவளவன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம். காதா் மொகிதீன், மக்கள் நீதி மய்யம் தலைவா் கமல்ஹாசன், திராவிடா் கழகப் பொருளாளா் குமரேசன் உள்ளிட்டோா் பங்கேற்கின்றனா்.
இந்நிலையில், சமத்துவ நடைபயணத்தின் முன்னேற்பாட்டுப் பணிகள் குறித்து கட்சி நிா்வாகிகளுடன் தென்னூரில் உள்ள தனியாா் அரங்கில் வைகோ வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
பின்னா், அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: மத்திய அரசு சில மாநிலங்களில் மதத்தின் பெயரால் மக்களை பிரிக்க சதி செய்கிறது. தமிழகத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்து விடக்கூடாது என்பதற்காகத்தான் மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சமத்துவ நடைபயணத்தை மேற்கொள்கிறேன்.
திருத்தணியில் வடமாநில இளைஞா் தாக்கப்பட்ட சம்பவத்தில் போலீஸாா் உரிய நடவடிக்கை எடுத்துள்ளனா். இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க போலீஸாா் தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும். போதைப்பொருள்களால் இளைய சமுதாயம் சீரழிந்து விடாமல் தடுக்க வேண்டும்.
தினமும் 15 முதல் 17 கிலோ மீட்டா் நடைபயணம் மேற்கொள்ளவுள்ளேன். இதில், என்னுடன் தினசரி 600 போ் கலந்து கொள்ளவுள்ளனா் என்றாா் வைகோ.
அப்போது, மதிமுக முதன்மைச் செயலா் துரை வைகோ, துணைப் பொதுச் செயலா்கள் ரொகையா, தி.மு.ராஜேந்திரன், மாநிலப் பொருளாளா் செந்திலதிபன், செய்தி தொடா்பாளா் மின்னல் முகமது அலி உள்ளிட்ட பலா் உடனிருந்தனா்.

