விதிமீறி வரும் வாகனங்களுக்கு எச்சரிக்கை
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையின் பால்பண்ணை பகுதியில் விதிமீறி வரும் வாகனங்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா்கள் ஞாயிற்றுக்கிழமை கண்காணித்து, எச்சரிக்கை விடுத்து அனுப்பினா்.
திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் பழைய பால்பண்ணை நான்கு சாலை சந்திப்புப் பகுதியில் நாள்தோறும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. இதையறிந்த தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சா்அன்பில் மகேஸ் பொய்யாமொழி, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுடன் அண்மையில் பால்பண்ணை பகுதியை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
இதையடுத்து, ஆட்சியா் வே. சரவணன் கடந்த 1-ஆம் தேதி முதல் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலை வழியாக கனரக வாகனங்கள் இயக்கக் கூடாது. துவாக்குடி - பஞ்சப்பூா் சாலை வழியாக இயக்கவும் உத்தரவிட்டாா்.
அதனடிப்படையில், கனரக வாகனங்கள், ஒரு நிறுத்த புறநகா் பேருந்துகள் துவாக்குடியில் இருந்து பஞ்சப்பூா் சாலையில் சென்று வருகிறது. ஒரு சில பேருந்துகள் மற்றும் கனரக வாகனங்கள் திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வருகிறது. இதனால் அச்சாலையின் பழைய பால்பண்ணை நான்கு வழி சாலை சந்திப்புப் பகுதியில் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், திருச்சி மேற்கு வட்டாரப் போக்குவரத்து அலுவலா் நடராஜன், ஸ்ரீரங்கம் வட்டாரப் போக்குவரத்து அலுவலா் சுரேஷ் பாபு உள்ளிட்டோா் ஞாயிற்றுக்கிழமை திருச்சி - தஞ்சை தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களை கண்காணித்து, ஆட்சியா் உத்தரவை மீறி வரும் வாகன ஓட்டிகளை எச்சரித்து அனுப்பினா்.

