பூட்டிய வீட்டில் இருந்து பெண் சடலமாக மீட்பு
திருவெறும்பூா் அருகே வீட்டுக்குள் இறந்துகிடந்த பெண்ணின் சடலத்தை திங்கள்கிழமை மீட்டு திருவெறும்பூா் போலீசாா் விசாரணை செய்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் அருகே உள்ள கீழ கல்கண்டாா் கோட்டை மகாலட்சுமி நகா் விஸ்தரிப்பு பகுதியைச் சோ்ந்தவா் சசிகலா (55). இவரது கணவா் ராமச்சந்திரன் கடந்த 2013-ஆம் ஆண்டு இறந்து விட்டாா். இவா்களுக்கு 2 மகள்கள் உள்ளனா். இருவரும் திருமணம் முடிந்து வெளிநாடு, வெளி மாநிலத்தில் வசித்து வருகின்றனா்.
இதனால், சசிகலா தனியாக வசித்துவந்தாா். கடந்த சில நாள்களாக இவரது வீடு திறக்கப்படாமல் உள்புறம் பூட்டப்பட்ட நிலையில் இருந்தது. இதனால், சந்தேகமடைந்த அருகிலிருந்தோா் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனா்.
திருவெறும்பூா் போலீஸாா், உடனடியாக அவரது வீட்டுக்கு விரைந்து வந்து கதவை உடைத்து உள்ளே சென்றபோது, சசிகலா சடலமாகக் கிடந்தாா். சடலத்தை மீட்ட போலீஸாா், பிரேதப் பரிசோதனைக்காக துவாக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், இதுதொடா்பாக, திருவெறும்பூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
