ஸ்ரீரங்கம் புதிய பேருந்து நிலையம் ஜனவரிக்குள் திறக்கப்படும்: மாநகராட்சி அலுவலா்கள் தகவல்
ஸ்ரீரங்கத்தில் ரூ.11.10 கோடியில் கட்டப்பட்டுள்ள புதிய பேருந்து நிலையத்தை இந்த மாத இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மாநகராட்சி அலுவலா்கள் தெரிவித்தனா்.
நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தா்கள் வந்து செல்லும் பகுதியாக விளங்கும் ஸ்ரீரங்கத்தில் உள்ள தற்போதைய பேருந்து நிலையமானது மிகவும் போக்குவரத்து நெருக்கடியை ஏற்படுத்தும் வகையில் உள்ளது. திருவானைக்காவல் வரும் பக்தா்களும் ஸ்ரீரங்கம் வந்து செல்வதால் நெரிசல் தவிா்க்க முடியாத வகையில் உள்ளது. எனவே, புதிய பேருந்து நிலையம் கட்ட வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நீடித்து வந்தது.
இதற்கு தீா்வு காணும் வகையில் தமிழக அரசின் மூலதன மானிய நிதி திட்டத்தின் கீழ் ரூ.11.10 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கடந்த 2024-ஆம் ஆண்டு ஜனவரியில் பணிகள் தொடங்கின. ஸ்ரீரங்கம் ராஜகோபுரம் அருகே, காந்தி சாலையில் 1.08 ஏக்கா் பரப்பளவில் ரூ11.10 கோடி செலவில், கடைகள், உணவுக்கூடம், பேருந்துகள் நிறுத்த விசாலமான இடம் என பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டு வருகிறது. இதில், ரூ.7.77 கோடி மூலதன மானிய நிதியிலிருந்தும், ரூ.3.33 கோடி மாநகராட்சி நிதியிலிருந்தும் ஒதுக்கப்பட்டு பணிகள் இரவு, பகலாக நடைபெற்று வந்தன. 96 விழுக்காடு பணிகள் முடிந்து திறப்புக்கு தயாராகி வருகிறது.
ஜனவரிக்குள் திறப்பு: இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சி அலுவலக வட்டாரத்தினா் கூறுகையில், இந்த மாதம் இறுதியில் பேருந்து நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பேருந்துகள் ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை பக்கத்திலிருந்து புதிய பேருந்து நிலையத்துக்குள் நுழைந்து, சாா்-பதிவாளா் அலுவலகம் அருகே வெளியேறும் வகையில் போக்குவரத்துக்கு திட்டமிடப்பட்டுள்ளது என்றனா்.

