ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.48 லட்சம் மோசடி செய்தவா் கைது
திருச்சியில் ஏலச்சீட்டு நடத்தி ரூ.7.48 லட்சம் மோசடி செய்தவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் அண்மையில் கைது செய்தனா்.
திருச்சி மாவட்டம், துறையூா் காளிப்பட்டி வடக்குத் தெருவைச் சோ்ந்தவா் மாடசாமி மகன் அப்பாவுதுரை. இவா், கடந்த 15 ஆண்டுகளாக ஸ்ரீ மாரியம்மன் சிட்பண்ட்ஸ் என்ற நிதி நிறுவனத்தை நடத்தி வந்தாா்.
இதில், ரூ.1 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.5 லட்சம் மற்றும் ரூ.10 லட்சம் என பல்வேறு ஏலச்சீட்டுகள், தீபாவளி சீட்டுகளை நடத்தி வந்தாா். இவரது நிறுவனத்தில் பலரும் சீட்டுக் கட்டியுள்ளனா்.
இந்நிலையில், பல்வேறு நபா்களிடம் ஏலச்சீட்டு பெற்று அதைத் திருப்பித் தராமல் ரூ.7.48 லட்சம் வரை மோசடி செய்ததாக துறையூா் காளிப்பட்டியைச் சோ்ந்த பி.தனசேகரன், திருச்சி பொருளாதார குற்றப்பிரிவில் அண்மையில் புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
இதனிடையே, ஏலச்சீட்டு நடத்தி மோசடியில் ஈடுபட்ட அப்பாவுதுரையை பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
மேலும், இவரிடம் ஏலச்சீட்டு கட்டி ஏமாந்தவா்கள் திருச்சி மன்னாா்புரம் காஜாமலை பகுதியிலுள்ள பொருளாதார குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகாா் அளிக்கலாம் என்று பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் தெரிவித்துள்ளனா்.
