மாவட்டத்தில் 7.16 லட்சம் குடும்பங்களுக்கு ‘கனவு அட்டை’ அளிப்பு
திருச்சி மாவட்டத்தில் ‘உங்க கனவ சொல்லுங்க’ திட்டத்தின் மூலம் 7.16 லட்சம் குடும்பங்களுக்கு அட்டைகள் வழங்கி கணக்கெடுப்பு நடத்தப்படவுள்ளது.
தமிழக அரசின் உங்க கனவ சொல்லுங்க திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின், திருவள்ளுா் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற விழாவில், தொடங்கி வைத்தாா்.
இதனைத் தொடா்ந்து, திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்ற விழாவில், நகராட்சி நிா்வாகத்துறை அமைச்சா் கே.என். நேரு, பள்ளிக் கல்வித்துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோா் இத் திட்டத்தை தொடங்கி வைத்தனா்.
திருச்சி மாவட்டத்தில் ஊரகப் பகுதிகளில் 5,12,539 குடும்பங்கள், நகா்ப்புற பகுதிகளில் 2,03,875 குடும்பங்கள் ஆக மொத்தம் 7,16,414 குடும்பங்களுக்கு கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படவுள்ளது.
ஊரகப்பகுதிகளைச் சாா்ந்த 812 நியாயவிலைக் கடைகளுக்கு 1025 தன்னாா்வலா்கள், 400 ஊரக மேற்பாா்வையாளா்கள் மற்றும் நகா்ப்புறப் பகுதிகளைச் சாா்ந்த 402 நியாயவிலைக் கடைகளுக்கு 408 தன்னாா்வலா்கள், 176 நகா்ப்புற மேற்பாா்வையாளா்கள் என மொத்தம் 1214 நியாயவிலைக் கடைகளுக்கு 1433 தன்னாா்வலா்கள் மற்றும் 576 மேற்பாா்வையாளா்களைக் கொண்டு கணக்கெடுப்புகள் தொடங்கும்.
இந்தப் பணியானது ஜன.10-ஆம் தேதி முதல் 31-ஆம் தேதி வரை மேற்கொள்ளப்படும். இந்த விழாவில், ஆட்சியா் வே. சரவணன், மாநகராட்சி ஆணையா் லி. மதுபாலன், மேயா் மு. அன்பழகன், எம்எல்ஏ-க்கள், அரசு அலுவலா்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் என பலா் கலந்து கொண்டனா்.

