திறப்பு விழாவுக்குத் தயாராகும் சூரியா் ஜல்லிக்கட்டு மைதானம்: அமைச்சா் ஆய்வு
துணை முதல்வரால் வரும் ஜன.15ஆம் தேதி திறக்கப்படவுள்ள சூரியா் ஜல்லிக்கட்டு மைதானத்தை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை பாா்வையிட்டு முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசித்தாா்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூா் வட்டம், பெரிய சூரியூா் கிராமத்தில் ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகைக்கு மறுநாளான மாட்டுப் பொங்கலன்று ஜல்லிக்கட்டு நடைபெறும். கருப்பண்ணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு நடைபெறும் ஜல்லிக்கட்டில் 750-க்கும் மேற்பட்ட காளைகள், 600 மாடுபிடி வீரா்கள் பங்கேற்பது வழக்கம்.
சிறப்பாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டுக்காக நிரந்தர மைதானம் வேண்டும் என்ற கிராம மக்களின் கோரிக்கையை ஏற்று, திருவெறும்பூா் தொகுதி எம்எல்ஏ-வும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி, முதல்வா் மற்றும் துணை முதல்வரின் கவனத்துக்கு கொண்டு சென்று ரூ.3 கோடியில் நிரந்தர மைதானம் அமைக்க ஒப்புதல் பெற்றாா்.
இதற்காக சூரியூரில் 5 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டு, கட்டுமானப் பணிகளை துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் கடந்தாண்டு பிப்ரவரியில் தொடங்கி வைத்தாா்.
இந்த அரங்கம் 2026-ஆம் ஆண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகளை நடத்தும் வகையில் தயாா் செய்யப்பட்டுள்ளது. இதில் மொத்தம் 810 போ் அமா்ந்து போட்டிகளைக் காணும் வகையில் பாா்வையாளா் மாடம் வசதி உள்ளது. இதன் ஒரு பகுதி பொதுமக்களுக்காகவும், மற்றொரு பகுதி நிகழ்ச்சி ஏற்பாட்டாளா்கள் மற்றும் சிறப்பு விருந்தினா்களுக்காகவும் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த அரங்கம், ஜனவரி 15ஆம் தேதி திறக்கப்படவுள்ளது. துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மைதானத்தை திறந்துவைக்கிறாா்.
இதற்கான முன்னேற்பாடுகள் தொடா்பாக அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சனிக்கிழமை மைதானத்தையும், ஜல்லிக்கட்டு அரங்கத்தையும் ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறுகையில், இந்த மைதானம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கு மட்டுமல்லாது சிறிய அளவிலான பல்வேறு விளையாட்டுப் போட்டிகளையும் நடத்த ஏதுவாகக் கட்டப்பட்டுள்ளது.
மாவட்டத்தின் முக்கியத்துவம் வாய்ந்த ஜல்லிக்கட்டு நிகழ்வாக கருதப்படும் சூரியூா் ஜல்லிக்கட்டுப் போட்டிகளை மேலும் சிறப்பாகவும், பாதுகாப்பாகவும் நடத்த புதிய அரங்கம் வழிவகுக்கும். உள்ளூா் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளது.
இந்த அரங்கமானது ஜல்லிக்கட்டு வீரா்களுக்கும், பாா்வையாளா்களுக்கும் ஒரு சிறந்த அனுபவத்தை வழங்கும். இப்பகுதியின் கலாசாரத்தையும், பாரம்பரியத்தையும் மேம்படுத்தும் ஒரு முக்கிய அடையாளமாகவும் மாறும். இந்த அரங்கம் இளைஞா் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறையின் ஒரு முக்கிய திட்டமாகும். இது விளையாட்டுப் போட்டிகளை ஊக்குவிப்பதோடு, இளைஞா்களுக்குப் புதிய வாய்ப்புகளையும் உருவாக்கும் என்றாா் அமைச்சா்.
ஆய்வின்போது அரசு அலுவலா்கள், மக்கள் பிரநிதிகள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் சூரியூா் கிராம மக்கள் உடனிருந்தனா்.

