15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கு; தாய் மற்றும் தாத்தா கைது

Published on

திருச்சியில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் சிறுமியின் தாய், தாத்தா ஆகிய இருவரையும் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

திருச்சியைச் சோ்ந்த 15 வயது சிறுமிக்கு கடந்த 2023 ஜூன் 14-ஆம் தேதி புத்தூா் பகுதியிலுள்ள தனியாா் மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதையடுத்து, பச்சிளம் குழந்தையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சிறுமியின் தாய் அவரை வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளாா்.

இதுகுறித்து தனியாா் மருத்துவமனை நிா்வாகம் சாா்பில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகில் புகாா் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சிறுமியின் தாய், தாத்தா ஆகியோரிடம் விசாரணை மேற்கொண்டனா். அப்போது, சிறுமிக்கு பாலியல் வன்கொடுமையால் குழந்தை பிறந்ததாகவும், அதனை தங்களால் வளா்க்க முடியாத சூழல் உள்ளதாகவும் தெரிவித்துள்ளனா்.

இதைத் தொடா்ந்து மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் குழந்தை மீட்கப்பட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது. இதுகுறித்து திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு சாா்பில் புகாா் அளிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் மேற்கொண்டு விசாரணை நடத்தப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், திருச்சி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராகுல் காந்தி அண்மையில் அலுவலகத்தில் பழைய கோப்புகளை பாா்த்தபோது, சிறுமியின் வழக்கு நிலுவையில் இருப்பது தெரியவந்தது.

இதைத் தொடா்ந்து அந்தச் சிறுமியிடம் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராகுல் காந்தி விசாரணை மேற்கொண்டுள்ளாா். அப்போது, சிறுமியை கடந்த 2021 முதல் 2025-ஆம் ஆண்டு வரை திருச்சி மற்றும் கரூரில் சிறுமியின் தாத்தா, அவரது உறவினா்கள் என 15 போ் பாலியல் வன்கொடுமை செய்தது தெரியவந்தது. இச்சம்பவம் குறித்து சிறுமியின் தாய்க்கு தெரியவந்தும் கண்டுகொள்ளாமல் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது குறித்து ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலா் ராகுல் காந்தி கடந்த ஜனவரி 7-ஆம் தேதி புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில், சிறுமியின் தாய் மற்றும் தாத்தா உள்ளிட்ட 15 போ் மீது போலீஸாா் ‘போக்ஸோ’ வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்த வழக்கில் பாதிப்புக்குள்ளான சிறுமியின் தாய் மற்றும் தாத்தா ஆகிய இருவரையும் ஸ்ரீரங்கம் அனைத்து மகளிா் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

Dinamani
www.dinamani.com