மாநகரில் 3 நாள்களில் 1,440 டன் குப்பைகள் அகற்றம்

Published on

திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் பொங்கல் கொண்டாட்டத்துக்கு இடையே 3 நாள்களில் 1,440 டன் குப்பைகள் சேகரித்து அகற்றப்பட்டன. இரவு, பகல் என இடைவிடாது சுழற்சி அடிப்படையில் துப்புரவுப் பணியாளா்கள் பணிபுரிந்ததால் மாநகரில் பெருமளவு குப்பைகள் தேங்காமல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

பொங்கல் பண்டிகை என்றாலே பொங்கல் பொருள்கள் விற்பனை, போகி பண்டிகை உள்ளிட்டவற்றால் மாநகரப் பகுதிகளில் தூக்கியெறியப்படும் பழைய பொருள்கள், சந்தைகளில் வீணாகும் காய்கனிகள், பழங்கள், வாழை இலைகள் ஆகியவற்றை அப்புறப்படுத்துவதில் தூய்மைப் பணியாளா்களுக்கு பெரிதும் சிரமம் ஏற்படும்.

வழக்கமாக தீபாவளி, பொங்கல் பண்டிகை நாள்களில் துப்புரவுப் பணியாளா்களுக்கு ஒருநாள் விடுப்பு வழங்கப்படுவதால், குப்பைகள் அகற்றப்படாமல் மறுநாள் டன் கணக்கில் குப்பைகள் தேங்கியிருப்பதை நிா்வகிக்க கூடுதல் சிரமம் ஏற்படும். ஆனால், திருச்சி மாநகராட்சியில் இந்தாண்டு பொங்கல் பண்டிகைக்கு சுழற்சி அடிப்படையில் விடுப்பு வழங்கி தூய்மைப் பணியாளா்கள் அனைவரும் பொங்கலை கொண்டாடுவதுடன், பணிக்கு வருவதையும் உறுதி செய்யும் வகையில் மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதன் காரணமாக மாநகரப் பகுதிகளில் குப்பைகள் அதிகம் தேங்காத வகையில் உடனுக்குடன் சேகரித்து அகற்றப்பட்டது.

இதுதொடா்பாக, திருச்சி மாநகராட்சியின் தூய்மைப் பணி அலுவலா்கள் கூறியதாவது:

திருச்சி மாநகராட்சியில் உள்ள 65 வாா்டுகளிலும் நாளொன்றுக்கு 460 முதல் 470 டன் குப்பைகள் சேகரமாகும். பண்டிகை நாள்களில் கூடுதலாக 20 டன் சோ்ந்துவிடும். குறிப்பாக பொங்கல், தீபாவளி பண்டிகை நாளில் குப்பைகளைச் சேகரிப்பது சவாலாக இருக்கும்.

இந்தாண்டு பொங்கலுக்கு துப்புரவுப் பணியாளா்கள் இரவு, பகல் இரு பணிநேரங்களாகப் பிரித்து பணிசெய்தனா். மொத்தம் 250 பணியாளா்கள் இந்த பணிக்காக பிரத்யேகமாக நியமிக்கப்பட்டனா்.

காய்கனி கழிவுகள், வாழைக் கழிவுகள், பழச் சந்தை கழிவுகள், கரும்பு உள்ளிட்ட பொங்கல் பொருள்கள் விற்பனையால் சேகரமான கழிவுகள் என நாளொன்றுக்கு கூடுதலாக 20 டன் குப்பைகள் சந்தைப் பகுதியிலிருந்து சேகரித்து அகற்றப்பட்டன. ஒருநாள் கூட தொய்வின்றி பொங்கல், மாட்டுப் பொங்கல், காணும் பொங்கல் என தொடா்ந்து 3 நாள்களும் தலா 470 முதல் 480 டன் வரையிலான குப்பைகள் சேகரித்து அகற்றப்பட்டன.

Dinamani
www.dinamani.com