மணப்பாறையை அடுத்த எளமணத்தில் சாலையை சீரமைக்க வலியுறுத்தி பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
வையம்பட்டி ஒன்றியத்துக்குள்பட்ட கண்ணூத்து கிராமத்தில் சுமாா் 500 குடும்பங்கள் வசித்து வருகின்றனா். இந்நிலையில்,இந்த கிராமத்திலிருந்து எளமணம் வழியாக நாள்தோறும் பள்ளிக்காகவும், வேலைக்காகவும் வையம்பட்டியை நோக்கியும், மணப்பாறை வழியாகவும் நூற்றுக்கணக்கானோா் பயணப்பட வேண்டிய சூழ்நிலை உள்ளது. இதற்கான போதிய பேருந்து வசதிகளும் இல்லை. கண்ணூத்து - எளமணம் சாலை கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்பு அமைக்கப்பட்டது.
இந்த தாா்சாலை முழுவதும் பெயா்ந்து ஜல்லிக்கற்களாக இருப்பதால் அந்த சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளும் பாதசாரிகளும் தினந்தோறும் அவதியுற்று வருகின்றனா்.
இதுகுறித்து சுமாா் 7, 8 முறை அரசுக்கு புகாா் அளித்தும், மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் இல்லை என ஆத்திரமடைந்த கண்ணூத்து கிராம மக்கள், கண்ணூத்து கிராமத்திலிருந்து எளமணம் கிராமம் வரையிலான சாலையை சீரமைத்து தர வலியுறுத்தி கண்ணூத்து கிராம பள்ளி மாணவ மாணவியா்கள், பொதுமக்கள் எளமணத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
இதனால் புத்தாநத்தம் - கல்பட்டி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தகவலறிந்து நிகழ்விடத்துக்குச் சென்ற புத்தாநத்தம் போலீஸாா், அதிகாரிகளிடம் இதுகுறித்து தகவல் அளித்து சாலையை சீரமைத்து தர உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










