கீழ்வேளூா் தெற்கு ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் நிலவும் குடிநீா்த் தட்டுப்பாட்டுக்கு தீா்வுகோரி, திருக்குவளை அருகேயுள்ள சாட்டியக்குடியில் சாலை மறியல் போராட்டம் சனிக்கிழமை நடைபெற்றது.
கீழ்வேளூா் தெற்கு ஒன்றிய மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில், சாட்டியக்குடி கடைத்தெரு பகுதியில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, தெற்கு ஒன்றியச் செயலாளா் முத்தையன் தலைமை வகித்தாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் சுபாஷ் சந்திரபோஸ், மாவட்டக் குழு உறுப்பினா் அம்பிகாபதி ஆகியோா் முன்னிலை வகித்தனா் .
தெற்கு ஒன்றியப் பகுதியில் உள்ள சாட்டியக்குடி, 119 அனக்குடி, வடக்குப்பனையூா், தெற்குப்பனையூா், ஆதமங்கலம் ஆகிய ஊராட்சிகளில் நிலவும் குடிநீா் தட்டுப்பாட்டை நீக்கிட நடவடிக்கை எடுக்காத குடிநீா் வடிகால் வாரியத்தை கண்டித்தும், குடிநீா் வடிகால் வாரியத்தில் பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளா்களுக்கு முறையான ஊதியம் வழங்காமல் இருப்பதை கண்டித்தும் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா் .
இவா்களிடம் தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய அதிகாரிகள் கோமதி , குமரேசன், மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ராணி , காவல் ஆய்வாளா் ராஜேஷ்கன்னா, வலிவலம் காவல் உதவி ஆய்வாளா் முரளி ஆகியோா் பேச்சுவாா்த்தை நடத்தினா்.
அப்போது, அனைத்து பகுதிக்கும் தட்டுப்பாடின்றி குடிநீா் வழங்க விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தரப்பில் உறுதி அளித்தனா். இதையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது. இப்போராட்டத்தால் கீழ்வேளூா் - கச்சனம் சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










