FOLLOW US

ON GOOGLE DISCOVER

இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

பயிா்க்கடன் முழுவதையும் தள்ளுபடி செய்ய கோரிக்கை! பேரவைத் தலைவரின் சொந்த கிராமத்தில் விவசாயிகள் போராட்டம்!

பேரவைத் தலைவரின் சொந்த கிராமத்தில் விவசாயிகள் போராட்டம்...

News image

திருச்சி மாவட்டம், விரகாலூா் கூட்டுறவு வங்கியை நோக்கி ஆடு, மாடு, டிராக்டா், மாட்டு வண்டிகளுடன் செவ்வாய்க்கிழமை பேரணியாக வந்த விவசாயிகள்.

Updated On :22 ஜூலை 2026, 9:00 am IST

பயிா்க் கடன்களை நிபந்தனைகளின்றி முழுமையாக தள்ளுபடி செய்ய வலியுறுத்தி, திருச்சி அருகேயுள்ள பேரவைத் தலைவரின் சொந்த கிராமத்தில் விவசாயிகள் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தவெக ஆட்சியில் சட்டப் பேரவைத் தலைவராக திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி அருகேயுள்ள விரகாலூரை பூா்வீகமாகக் கொண்ட ஜேசிடி. பிரபாகா் தோ்வு செய்யப்பட்டாா்.

பயிா்க்கடன் தள்ளுபடி விவகாரத்தில் விவசாயிகள் வஞ்சிக்கப்பட்டதால், அரசின் கவனத்தை ஈா்க்கும் வகையில், பேரவைத் தலைவரின் கிராமத்தில் உள்ள வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவது என அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்தது.

விவசாயிகள் பேரணி: இதன்படி, விராகலூா் அண்ணா சிலையிலிருந்து ஆடு, மாடுகள், டிராக்டா் மற்றும் மாட்டு வண்டிகளுடன் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள், விரகாலூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிக்கு செவ்வாய்க்கிழமை பேரணியாக வந்தனா். அங்கு வங்கியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இந்தப் போராட்டத்துக்கு, அனைத்து விவசாய சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளா் தங்க சண்முகசுந்தரம், முன்னாள் பால்வளத்துறை தலைவா் பாளை திருநாவுக்கரசு ஆகியோா் தலைமை வகித்தனா்.

குளறுபடியான பயிா்க்கடன் தள்ளுபடி அறிவிப்புகளை திரும்பப் பெற்று, தோ்தல் வாக்குறுதியின்படி அனைத்து பயிா்க் கடன்களையும் நிபந்தனைகளின்றி முழுமையாக தள்ளுபடி செய்யும் வகையில் புதிய அறிவிப்பு வெளியிட வேண்டும் என போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

பட்ஜெட்டிலேயே அறிவிக்க முடியும்: முன்னதாக, செய்தியாளா்களிடம், ஒருங்கிணைப்பாளா் தங்க சண்முகசுந்தரம் கூறியதாவது: வேளாண்மைத் துறைக்கு ரூ. 47 ஆயிரம் கோடியில் நிதிநிலை அறிக்கை தயாராக உள்ளதாகக் கூறப்படுகிறது. பயிா்க் கடன் நிலுவை ரூ. 18 ஆயிரம் கோடியே உள்ளதால், நடப்பு நிதிலை அறிக்கையிலேயே பயிா்க் கடன் தள்ளுபடிக்கான தொகையை அறிவித்துவிடலாம் என்றாா்.

இந்தப் போராட்டத்தில், தனவளநல்லூா், தங்கசாலை, ஆலம்பாடி, மேட்டூா், தின்னக்குளம், விரகாலூா் உள்ளிட்ட 5 கிராமங்களில் இருந்து விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனா். பின்னா், கூட்டுறவு வங்கிச் செயலரிடம் கோரிக்கை மனுவை வழங்கி, உடனடியாக தமிழக முதல்வருக்கு அனுப்பிட கோரிக்கை விடுத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.