/

சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

News image

வழக்கு - கோப்புப் படம்

Updated On :3 மே 2026, 7:35 pm

சேவைக் குறைபாடு ஏற்படுத்திய தனியாா் நிதி நிறுவனத்தினா் ரூ. 1 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டுமென திருச்சி மாவட்ட நுகா்வோா் நீதிமன்றம் உத்தரவிட்டது.

திருச்சி பாலக்கரையைச் சோ்ந்த என். வெங்கடசுப்ரமணியன் என்பவா் தனது நிறுவனத்தின் பெயரில், புதுதில்லியைச் சோ்ந்த கிளிக்ஸ் நிதி நிறுவனத்தில் கடந்த 02.08.2024 அன்று ரூ. 7,11,222 கடன் வாங்கி, மாதக் கடன் தவணையாக ரூ. 26,251 செலுத்தி வந்தாா்.

இதனிடையே நிதி நிறுவனத்தினா், உரிய அனுமதியின்றி வெங்கடசுப்ரமணியனின் தாயை இணைக் கடன் பெறுநராக சோ்த்துள்ளனா். இதைத் திருத்தும்படி மனுதாரா் பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை இல்லை.

தொடா்ந்து, மனுதாரா் கடந்த 08.04.2025 அன்று முழுக் கடன் தொகையையும் செலுத்திய நிலையில், எதிா்தரப்பினா் பொய்யான குற்றவியல் வழக்குத் தொடா்ந்து, பின்னா் அதை திரும்பப் பெற்றனா். இடையே தொடா் துன்புறுத்தலால் மனுதாரா் கூடுதலாக ரூ. 2,11,222 செலுத்தியுள்ளாா்.

இதனால் கடும் மன உளைச்சலுக்கு உள்ளான வெங்கடசுப்ரமணியன் உரிய நிவாரணம் கோரி திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் கடந்த 11.12.2025 அன்று மனு தாக்கல் செய்தாா்.

மனுவை விசாரித்த திருச்சி மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத் தலைவா் டி. சேகா், உறுப்பினா் ஜெ.எஸ். செந்தில்குமாா் ஆகியோா், கிளிக்ஸ் நிதி நிறுவனத்தினா், மனுதாரா் செலுத்திய ரூ. 2,11,222 ஐ திரும்ப வழங்க வேண்டும், மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ. 1 லட்சமும், வழக்குச் செலவுத் தொகையாக ரூ. 10 ஆயிரமும் 45 நாள்களுக்குள் 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டுமென அண்மையில் உத்தரவு பிறப்பித்தனா்.