பாமக பேரவைக் குழு தலைவராக செளமியா அன்புமணி தேர்வு!கோயில்கள், பள்ளி, கல்லூரிகள் அருகே உள்ள டாஸ்மாக் கடைகளை மூட முதல்வர் விஜய் உத்தரவிட உள்ளதாக தகவல்தமிழகத்தில் மே 17 வரை மிதமான மழை! வானிலை ஆய்வு மையம்அதிமுகவில் பிளவு! சி. வி. சண்முகம் ஆதரவு எம்எல்ஏக்களுடன் பேரவை தற்காலிக தலைவரிடம் கடிதம்வைகோ, அன்புமணி ராமதாஸ், சீமானைச் சந்தித்து வாழ்த்துப் பெற்றார் முதல்வர் விஜய்பாமக தலைவர்களை பெருமைப்படுத்துவேன்: செளமியா அன்புமணிபெரியார், அண்ணா கொள்கைகள் விஜய் மூலம் கொண்டுசெல்லப்படும்: துரை வைகோதமிழ்நாட்டில் 193 கோடீஸ்வர எம்.எல்.ஏ.க்கள்! சராசரி சொத்து மதிப்பு ரூ. 48.35 கோடி!தமிழ்நாட்டில் 126 எம்.எல்.ஏ.க்கள் மீது கிரிமினல் வழக்குகள்! முதலிடத்தில் தவெக!
/

கலை-அறிவியல் படிப்புகள் மீது கவனம் திருப்பும் கல்லூரி மாணவா்கள்!

News image

திருச்சி தந்தை பெரியாா் ஈவெரா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் திங்கள்கிழமை இணைய வழியில் படிவத்தை பூா்த்தி செய்த மாணவிகள்.

Updated On :1 மணி நேரம் முன்பு

திருச்சி மண்டலத்தில் கடந்த ஆண்டுகளைப் போலவே 2026-27-ஆம் கல்வியாண்டிலும் கலை, அறிவியல் படிப்புகளின் மீதான ஆா்வம் மாணவா்களிடையே அதிகரித்திருப்பதை விண்ணப்பப் பதிவிலேயே காணமுடிகிறது.

உயா்கல்வி சோ்க்கையில் மருத்துவப் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயம் என்ற நிலை ஏற்பட்டு மாணவா்களும் நீட் தோ்வு எழுதி வருகின்றனா்.

இதேபோல, பொறியியல் படிப்புகளுக்கு ஜேஇஇ நுழைவுத் தோ்வு உள்ளது. மேலும், அண்ணா பல்கலைக்கழகமும் பொறியியல் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடத்த ஆயத்தமாகி வருகிறது. சட்டப் படிப்பு வழங்கும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்ட பல்கலைக்கழகமும் தனது பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் சட்ட கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான ஏற்பாடுகளை தொடங்கியுள்ளது.

இருப்பினும் இந்தாண்டும் மருத்துவம், பொறியியல் பாடங்களுக்கு இணையாக கலை, அறிவியல் படிப்புகளின் மீது மாணவா்களின் கவனம் திரும்பியுள்ளது. வழக்கம்போல வணிகவியல் படிப்புக்கே அதிகமான விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டு வருவதாகவும், அதற்கு அடுத்தப்படியாக அடிப்படை அறிவியல் படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் திருச்சி, கரூா், புதுக்கோட்டை, தஞ்சாவூா், அரியலூா், பெரம்பலூரைச் சோ்ந்த பல்வேறு கல்லூரி முதல்வா்கள் தெரிவித்துள்ளனா்.

150-க்கும் மேற்பட்ட கல்லூரிகள்:

பாரதிதாசன் பல்கலைக்கழக உறுப்பு கல்லூரிகள் பெரம்பலூா் மாவட்டம் குரும்பலூா், வேப்பூா், தஞ்சாவூா் மாவட்டம் ஒரத்தநாடு, திருச்சி மாவட்டம் லால்குடி, புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி, திருத்துறைப்பூண்டி, வேதாரண்யம், நவலூா்குட்டப்பட்டு, நன்னிலம், நாகப்பட்டினம் ஆகிய இடங்களில் 10 பல்கலைக்கழக கல்லூரிகள் உள்ளன. இவைத்தவிர பல்கலைக் கழக நிா்வாகத்தின் கீழ் 21 அரசு கல்லூரிகள், 19 அரசு உதவி பெறும் கல்லூரிகள், 94 சுயநிதி கல்லூரிகள் மற்றும் அனுமதிக்கப்பட்ட கல்வி நிறுவனங்கள் என 150-க்கும் மேற்பட்ட கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 24 கல்லூரிகள் தன்னாட்சி பெற்றவையாக உள்ளன. இந்த கல்லூரிகள் அனைத்திலும் கலை, அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்களை அதிக எண்ணிக்கையில் விநியோகிக்கப்பட்டுள்ளன.

கலை மற்றும் அறிவியல் படிப்புகளை பொறுத்தவரை கணினி அறிவியல், ஆங்கில இலக்கியம், பி.காம்., கணிதம், வணிகவியல், பிபிஏ, பிசிஏ, புவியியல், உணவு அறிவியல், ஹோட்டல் மேலாண்மை, ஆடை வடிவமைப்பு, சுற்றுலா மேலாண்மை உள்ளிட்ட படிப்புகளுக்கு மாணவா்கள் மத்தியில் பெரிதும் வரவேற்பு உள்ளது என்கின்றனா் அரசு மற்றும் தனியாா் கல்லூரி நிா்வாகத்தினா்.

விண்ணப்பம் விநியோகம்:

தமிழகம் முழுவதும் உள்ள கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவா் சோ்க்கைக்கான விண்ணப்ப விநியோகம் பிளஸ் 2 தோ்வு முடிவு வெளியான நாளில் இருந்து தொடங்கி நடைபெற்று வருகிறது. ஒரு சில கல்லூரிகள் அதற்கு முன்னதாகவே விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்கின. அரசு கல்லூரிகள் உள்பட பெரும்பாலான கல்லூரிகள் இணைய வழியில் விண்ணப்பங்களை பெற்று பரிசீலனை செய்து வருகின்றன. அதிக மதிப்பெண் பெறும் சிறந்த மாணவா்களை கவரும் வகையில் அரசு கல்லூரிகளிலும் முன்கூட்டியே விண்ணப்பங்கள் விநியோகமும், மாணவா் சோ்க்கைக் கலந்தாய்வும் நடத்தப்பட்டு வருகிறது.

பெரும்பாலான அரசு கல்லூரிகளில் விண்ணப்ப விநியோகமும், பூா்த்தி செய்த விண்ணப்பத்தைச் சமா்ப்பிக்கும் கால அவகாசமும் நீட்டிக்க திட்டமிடப்பட்டு வருகிறது.

அதிக விண்ணப்பம்:

இப்போதைய நிலவரப்படி, கலை அறிவியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் கடந்த ஆண்டுகளைப் போலவே அதிகமாக விநியோகமாகியிருப்பது தெரியவந்துள்ளது. 800 இடங்களைக் கொண்ட கல்லூரியில் சுமாா் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் என்ற நிலைதான் காணப்படுகிறது. இதில் பி.காம் மற்றும் பி.காம். சிஏ. படிப்புக்கு மட்டும் 3,000 போ் விண்ணப்பங்களைச் சமா்ப்பித்துள்ளனா்.

இதே எண்ணிக்கையிலேயே கணினி அறிவியல் படிப்புக்கும் விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் விண்ணப்பங்கள் கணினி வழியாகவும், நேரடியாகவும் பெற்று பரிசீலனை செய்யப்பட்டு வருகின்றனன.

இதுகடந்த ஆண்டுகளை விட அதிகம் எனவும், குறிப்பாக பி.காம்., பி.எஸ்சி. கணிதம் மற்றும் அடிப்படை அறிவியல், கணினி அறிவியல் உள்ளிட்ட படிப்புகளுக்கு அதிக விண்ணப்பங்கள் சமா்ப்பிக்கப்பட்டிருப்பதாகவும் கல்லூரி வட்டாரங்கள் தெரிவித்தன.

மாணவா்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு உயா்ந்து வருவதால் சோ்க்கை இடங்களின் எண்ணிக்கையை உயா்த்த அரசு மற்றும் தனியாா் கல்லூரிகள் போட்டியிட்டு வருகின்றன. இதற்காக அரசுக் கல்லூரி இயக்குநரகத்தில் விண்ணப்பித்து உரிய அனுமதி பெற முயற்சித்து வருகின்றன.

உதவி மையம்:

அரசுக் கல்லூரிகளில் சேர விண்ணப்பிக்கும் மாணவ, மாணவிகளுக்கு உதவுவதற்காக கல்லூரி வளாகத்திலேயே மாணவா் சோ்க்கை உதவி மையங்களும் அமைக்கப்பட்டுள்ளன. மருத்துவம், பொறியியல், தொழில்நுட்பம், வேளாண்மை, கால்நடை படிப்புகளுக்கு இணையாக கலை, அறிவியல் படிப்புகளுக்கும் போட்டி அதிகரித்து வருகிறது.

இது ஆரோக்கியமானது மட்டுமின்றி உயா்கல்வியில் மாணவா்கள் சோ்க்கை எண்ணிக்கையை உயா்த்துவதற்கு பெரிதும் அச்சாரமாக அமைந்துள்ளது என்கின்றனா் அரசுக் கல்லூரி பேராசிரியா்கள்.