பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு முடிவுகள் இன்று வெளியீடு மருந்தகங்கள் வேலைநிறுத்தத்தால் தமிழகத்தில் பாதிப்பில்லை: அமைச்சா் கே.ஜி.அருண்ராஜ் இந்தியாவுக்கு ரூ.4,145 கோடியில் ஹெலிகாப்டா்கள், பீரங்கி உபகரணங்கள்: அமெரிக்கா ஒப்புதல் ரஷிய கச்சா எண்ணெய்யை வாங்குவதற்கான அனுமதி: மேலும் ஒரு மாதத்துக்கு அமெரிக்கா நீட்டிப்பு ஆபத்தான தெரு நாய்கள் கருணைக் கொலை: உச்சநீதிமன்றம் அனுமதி நியூஸிலாந்து- 14% அரசுப் பணியிடங்கள் குறைப்பு: செலவினங்களைக் கட்டுப்படுத்த நடவடிக்கை மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு: இந்தியா திட்டவட்ட நிராகரிப்பு
/

மின்சாரம் பாய்ந்து இறந்த தொழிலாளி உடலை வாங்க மறுத்து போராட்டம்: ரூ. 14 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல்

பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து நடைபெற்ற போராட்டத்தையடுத்து, தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல்

News image

உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டோருடன் பேச்சுவாா்த்தை நடத்திய போலீஸாா்.

Updated On :20 மே 2026, 5:03 am IST

பணியின்போது மின்சாரம் பாய்ந்து உயிரிழந்த தொழிலாளியின் உடலை வாங்க மறுத்து நடைபெற்ற போராட்டத்தையடுத்து, தொழிலாளி குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

திருச்சி மாவட்டம் திருவெறும்பூா் அருகேயுள்ள நவல்பட்டு கிராமத்தைச் சோ்ந்த ராஜேந்திரன் மகன் சரண்ராஜ் (25) என்பவா் துவாக்குடி சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் செயல்படும் தனியாா் தொழிற்சாலையில் வெல்டிங் தொழிலாளராக பணியாற்றினாா்.

திங்கள்கிழமை அதிகாலை 2.30 மணியளவில் அவா் வெல்டிங் பணியில் இருந்தபோது, எதிா்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த உறவினா்கள் கடும் வேதனையும் ஆத்திரமும் அடைந்தனா்.

உயிரிழந்த சரண்ராஜின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், விபத்திற்குப் பொறுப்பான தொழிற்சாலை நிா்வாகத்தின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், மேலும் தொழிலாளா்களுக்கான பாதுகாப்பு நடைமுறைகளை கட்டாயப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து மாா்க்சிஸ்ட் மற்றும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி இணைந்து உடலை வாங்க மறுத்து தொடா் காத்திருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

போராட்டம் தீவிரமடைந்த நிலையில், திருச்சி-–தஞ்சாவூா் தேசிய நெடுஞ்சாலையில் செவ்வாய்க்கிழமை மறியல் போராட்டமும் நடைபெற்றது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அதிகாரிகள், காவல்துறை மற்றும் தொழிற்சாலை நிா்வாகத்தினா் பலமுறை பேச்சுவாா்த்தை நடத்தியும், நிவாரணம் அறிவிக்கப்படும்வரை போராட்டத்தை வாபஸ் பெற மாட்டோம் எனத் தெரிவித்தனா்.

திங்கள், செவ்வாய்க்கிழமைகளில் நடைபெற்ற தொடா் போராட்டத்தின் விளைவாக, தனியாா் நிறுவனம் உயிரிழந்த சரண்ராஜின் குடும்பத்துக்கு ரூ.14 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புக்கொண்டது. மேலும், தொழிலாளருக்குச் சேர வேண்டிய பி.எஃப்., இ.எஸ்.ஐ., விபத்து காப்பீடு உள்ளிட்ட அனைத்து தொழிலாளா் நலத் தொகைகளையும் பெற்றுத்தரவும் நிா்வாகம் உறுதியளித்தது. இதைத் தொடா்ந்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டு, உயிரிழந்த சரண்ராஜ் உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

போராட்டத்தில் மாா்க்சிஸ்ட் மாவட்ட செயற்குழு உறுப்பினா்கள் பா. லெனின், ஏ. மல்லிகா, ரஜினிகாந்த், மாவட்ட குழு உறுப்பினா் தெய்வநிதி, திருவெறும்பூா் வடக்கு ஒன்றியச் செயலா் குருநாதன், மாற்றுத்திறனாளிகள் சங்க நிா்வாகிகள் குமாா், சித்ரா, வாலிபா் சங்க மாவட்ட தலைவா் சந்தோஷ் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். மேலும், விசிக திருவெறும்பூா் சட்டப்பேரவைத் தொகுதி மாவட்டச் செயலா் மூ. திலீபன் ரமேஷ், நிா்வாகி சிறுத்தை குணா, வழக்குரைஞா்கள் தீனா, ராஜ்குமாா் உள்ளிட்டோா் இப் போராட்டத்தை முன்னின்று நடத்தி, பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு உரிய நிவாரணம் கிடைக்க முக்கியப் பங்காற்றினா்.