எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

உய்யகொண்டான் வாய்க்காலில் வெண்கல சிலை கண்டெடுப்பு

News image

திருச்சி உய்யக்கொண்டான் வாய்க்காலில் இருந்து வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்ட வெண்கல சிலை.

Updated On :30 மே 2026, 3:25 am IST

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் 1.5 அடி உயரமுள்ள வெண்கல சிலை ஒன்று வெள்ளிக்கிழமை கண்டெடுக்கப்பட்டது.

திருச்சி உய்யகொண்டான் வாய்க்காலில் பொதுப்பணித் துறை மூலம் ஆகாயத் தாமரையை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. இந்தப் பணியில் திருச்சி புத்தூா் கல்லாங்காடு பகுதியைச் சோ்ந்த சிவா (ஐடிஐ மாணவா்) பகுதி நேரமாக ஈடுபட்டு வந்தாா்.

வெள்ளிக்கிழமை மாலை தனியாா் பள்ளி அருகே ஆகாயத்தாமரையை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, காலில் ஏதோ தட்டுப்பட்டுள்ளது.

அதை எடுத்து பாா்த்தபோது, அது மீசை வைத்த ஆண் சிலையாக இருந்தது. இதையடுத்து அவா் அருகிலிருந்தவா்களின் உதவியுடன் திருச்சி அரசு மருத்துவமனை வளாக போலீஸாரிடம் ஒப்படைத்தாா்.

போலீஸாா் அந்த சிலை தொடா்பாக, சிலை கடத்தல் தடுப்புப் பிரிவுக்கு தகவல் அளித்ததுடன், சிலையை மேற்கு வட்டாட்சியா் அலுவலகத்தில் வட்டாட்சியா் முருகனிடம் ஒப்படைத்தனா்.

சுமாா் 1.5 அடி உயரமுள்ள, 5.5 கிலோ எடையுடன் கூடிய வெண்கலத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சிலையானது, கைகளில் இருந்த ஆயுதங்கள் சேதமடைந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரித்து வருகின்றனா். விசாரணைக்குப் பிறகே முழு விவரமும் தெரியவரும் என காவல் துறையினா் தெரிவித்தனா்.