மேட்டூா் அணைக்கு நீா்வரத்து அதிகரிப்பு!ரூ. 200 கோடியைக் கடந்த விஸ்வநாத் அண்ட் சன்ஸ் வசூல்!2025-26-ல் மத்திய அமைச்சர்களின் தில்லி வீடுகளைப் பழுதுபார்க்க ரூ.92 கோடி செலவு!திருமலையில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை!இம்ரான் கானுக்கு உயர் சிகிச்சை: கபில்தேவ் உள்ளிட்ட சர்வதேச முன்னாள் கேப்டன்கள் கடிதம்!மகாராஷ்டிரம்: ஏரிக்கு அருகே ஹெலிகாப்டர் அவசர தரையிறக்கம்! இந்திய வீரர் கரண் சர்மா அனைத்து வகை கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு!

கருணாநிதி மறைவு: 2வது நாளாக கடைகள் அடைப்பால் வெறிச்சோடிய சாலைகள்

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவையடுத்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில்

Published On :30 ஜனவரி 2024, 9:57 pm IST

தமிழக முன்னாள் முதல்வரும், திமுக தலைவருமான கருணாநிதி மறைவையடுத்து பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்ததோடு, பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
திமுக தலைவர் மு.கருணாநிதி செவ்வாய்க்கிழமை மரணமடைந்ததையடுத்து தனியார், அரசுப் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு புதன்கிழமை விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டது. பெரம்பலூர் மாவட்டத்தில் மருந்துக் கடைகள், பெட்ரோல் விற்பனை நிலையங்கள், உணவகங்கள், தேனீர், பெட்டிக் கடைகள், தரைக் கடைகள் உட்பட அனைத்துக் கடைகளும் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. 
தனியார், அரசுப் பேருந்துகள், மினி பேருந்துகள், கார், வேன், ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள், லாரி, சரக்கு ஆட்டோக்கள் உள்பட எந்தவொரு வாகனமும் இயங்கவில்லை. அதேபோல, தனியார் நிறுவனங்கள், திரையரங்குகள், தொழிற்சாலைகள் அடைக்கப்பட்டிருந்தன. மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகள் இயங்கிய போதிலும் மக்கள் வரத்து சொற்பமாகவே இருந்தது. இதனால், பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சாலைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இருசக்கர வாகனங்களின் நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டது. 
கடைகள் அடைப்பு, வாகனப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. 
ஆசிரியர்கள், ரசிகர் மன்றத்தினர் மெளன ஊர்வலம்: திமுக தலைவர் கருணாநிதி மறைவையடுத்து ஆசிரியர்கள், அனைத்து ரசிகர் மன்றத்தினர், பொதுமக்கள் சார்பில் புதன்கிழமை அமைதிப் பேரணி, மெளன ஊர்வலம், மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
தமிழக ஆசிரியர் கூட்டணி ஆலத்தூர் வட்டார கிளை சார்பில் அமைதி பேரணி புதன்கிழமை நடைபெற்றது. பெரம்பலூர் பாலக்கரையில் தொடங்கிய அமைதி பேரணியானது வெங்கடேசபுரம், ரோவர் வளைவு வழியாக பழைய பேருந்து நிலையத்தில் நிறைவடைந்தது. 50க்கும் அதிகமான ஆசிரியர்கள் பங்கேற்றனர். 
மாவட்ட அனைத்து ரசிகர் நற்பணி இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் பெரம்பலூர் பழைய பேருந்து நிலையத்தில் தொடங்கிய மெளன ஊர்வலம் சங்குப் பேட்டை, காமராஜர் வளைவு, ரோவர் வளைவு, பாலக்கரை, புறநகர் பேருந்து நிலையம் வழியாக சென்று மாவட்ட திமுக அலுவலகத்தில் நிறைவடைந்தது. அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. ரஜினி ரசிகர் மன்ற மாவட்டச் செயலர் சண்முகதேவன், கமலஹாசன் ரசிகர் மன்ற நிர்வாகி முத்துக்குமார், விஜய் ரசிகர் மன்ற மாவட்டச் செயலர் சிவா, விஷால் ரசிகர் மன்ற மாவட்டச் செயலர் ரமேஷ் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் அக்கட்சியின் மாவட்டச் செயலர் சி. தமிழ்மாணிக்கம் தலைமையில் புறநகர் பேருந்து நிலையத்தில் கருணாநிதி உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
ஆலம்பாடி கிராமத்தில் அப்பகுதி திமுகவினர் கருணாநிதி உருவப் படத்துக்கு மலரஞ்சலி செலுத்தினர். பெண்கள் ஒப்பாரி வைத்து அஞ்சலி செலுத்தினர்.
பெரம்பலூர் 1வது வார்டு திமுக பிரமுகர் பாத்திமா தலைமையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் ஆலம்பாடி சமத்துவ புரத்திலிருந்து, பழைய பேருந்து நிலையம், சங்குப்பேட்டை வழியாக திமுக அலுவலகம் வரை மெளன ஊர்வலம் சென்றனர்.  
அதேபோல, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் ஆங்காங்கே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.                                                
அரியலூர்: அரியலூர் மாவட்டத்தில் அனைத்துக் கடைகளும் புதன்கிழமை அடைக்கப்பட்டிருந்தன. மேலும் பேருந்து சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டதால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மாவட்டத்தில் அரியலூர், ஜயங்கொண்டம், செந்துறை, திருமானூர், ஆண்டிமடம் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டன. பேருந்துகள்  இயங்கவில்லை. இதனால் பெரும்பாலான சாலைகளில் மக்கள் கூட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. இரு சக்கர வாகனங்கள் மட்டுமே அதிகளவில் இயக்கப்பட்டன.
அமைதிப் பேரணி: அரியலூர் நகர திமுக சார்பில் கட்சியின் நகர அலுவலகத்தில் இருந்து அமைதிப் பேரணி நடைபெற்றது. பிரதான சாலை வழியாக சென்ற கட்சியினர் அரியலூர் பேருந்து நிலையம் அருகே வைக்கப்பட்டிருந்த கருணாநிதி உருவப் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.கரைவெட்டி, கீழகாவட்டாங்குறிச்சியில்  கருணாநிதி உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்திய திமுகவைச் சேர்ந்த பலர் மொட்டை  அடித்துக் கொண்டனர்.


கல்வீசித் தாக்கியதில் 2 அரசுப் பேருந்துகள் கண்ணாடி உடைப்பு
 திமுக தலைவர் மரணமடைந்ததையடுத்து பெரம்பலூர் அருகே செவ்வாய்க்கிழமை இரவு 2 அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கியதில் கண்ணாடி உடைந்தது.
திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பெரம்பலூர் அருகே தண்ணீர்பந்தல் அருகிலும், செங்குணம் பிரிவு சாலையில் சென்று கொண்டிருந்த 2 அரசுப் பேருந்துகள் மீது மர்ம நபர்கள் கல்வீசித் தாக்கினர். இதில் இரு அரசுப் பேருந்துகளின் கண்ணாடிகள் உடைந்து சேதமடைந்தது.  இதுகுறித்து பெரம்பலூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.  
மரம் வெட்டி சாய்ப்பு: பெரம்பலூர் அருகே ரெங்கநாதபுரம் கிராமத்தில் மர்ம நபர்கள் சிலர் சாலையோரத்திலிருந்த மரத்தை செவ்வாய்க்கிழமை இரவு வெட்டி போக்குவரத்துக்கு தடை ஏற்படுத்தினர். சம்பவ இடத்துக்குச் சென்ற பெரம்பலூர் போலீஸார் சாலையில் கிடந்த மரத்தை அகற்றியதையடுத்து போக்குவரத்து சீரானது.                                                  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.