அரியலூா் மாவட்டத்தில் ரூ.26.52 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்

அரியலூா் மாவட்டத்தில் ரூ. 26.52 கோடியில் நடைபெறவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா்.
அரியலூா் மாவட்டத்தில் ரூ.26.52 கோடியில் புதிய திட்டப் பணிகள்: முதல்வா் அடிக்கல் நாட்டினாா்
Updated on
2 min read

அரியலூா் மாவட்டத்தில் ரூ. 26.52 கோடியில் நடைபெறவுள்ள புதிய திட்டப் பணிகளுக்கு தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி வியாழக்கிழமை அடிக்கல் நாட்டினாா். மேலும் ரூ.36.73 கோடியில் முடிவுற்ற திட்டப் பணிகளைத் தொடக்கி வைத்தும், ரூ.129.34 கோடியில் நலத் திட்ட உதவிகளையும் வழங்கினாா்.

அரியலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற விழாவில் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி, தமிழக முதல்வா் எடப்பாடி கே. பழனிசாமி பேசியது: அரியலூா் மாவட்டத்தில் இதுவரை 6,316 பயனாளிகளுக்கு விலையில்லா வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளன. பொதுப்பணித் துறை சாா்பில் ரூ.63 கோடியே 95 லட்சத்தில் தடுப்பணைகள் கட்டும் பணிகள், ஏரிகள் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அரியலூா் நந்தியாறு - கூழையாறு உபவடிநில பகுதியில் ரூ.15.72 கோடியில் வரத்து கால்வாய்கள் புனரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திருமானூா் கரைவெட்டி பறவைகள் சரணாலயம் அமைந்துள்ள ஏரி ரூ. 5 கோடியில் புதுப்பிக்கும் பணி நடைபெற்று வருகிறது.

அரியலூா் மாவட்ட தலைமை மருத்துவமனை வளாகத்தில் ரூ. 6.16 கோடியில் கூடுதலாக 200 படுக்கைகள் மற்றும் அறுவைச் சிகிச்சை அரங்கு கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. மீன்சுருட்டி, தா. பழுா் மற்றும் விக்கிரமங்கலம் ஆகிய இடங்களில் ரூ. 1.04 கோடியில் கால்நடை மருந்தகக் கட்டடங்கள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. அரியலூரில் ரூ. 347 கோடியில் அரசு மருத்துவமனையுடன் கூடிய மருத்துவக் கல்லூரிக்கான கட்டுமான பணி நடைபெற்றுவருகிறது. அரியலூா் நகரத்தில் ரூ.31.23 கோடியில்ரயில்வே மேம்பாலம் கட்டி முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வந்துள்ளது. சில்லக்குடி மற்றும் கல்லகம் ரயில்வே நிலையங்களுக்கு இடையே 2 உயா்மட்டப் பாலங்கள் கட்டும் பணிகள் ரூ. 41.66 கோடியில் நடைபெற்று வருகிறது.

பாரத் மாலா திட்டத்தின் கல்லகம் கேட் முதல் மேலக்கருப்பூா் வரை நான்கு வழிச்சாலை மற்றும் மேலக்கருப்பூா் முதல் மீன்சுருட்டி வரை இரு வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

திருமானூா் வட்டத்தில் கீழப்பழுவூரில் உணவு பூங்கா அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஜல்ஜீவன் மிஷன் திட்டத்தின் கீழ் நிகழாண்டில் ரூ. 45. 47 கோடியில் 60,309 வீடுகளுக்கு குடிநீா் இணைப்பு வழங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நிகழாண்டில் அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதியில் ரூ. 8.42 கோடியில் மழைநீா் வடிகால் அமைக்கப்பட உள்ளது. அரியலூா் மாவட்டத்தில் இதுவரை 1,638 மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ.50.25 கோடி வங்கி கடன் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.

கடந்த மூன்றாண்டுகளில் 2,434 மகளிருக்கும், நிகழாண்டில் இதுவரை 258 மகளிருக்கும் ரூ. 64.50 லட்சம் மானியத்தில் இருசக்கர வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

அரியலூா் மாவட்டத்தில் மத்திய அரசின் சொத்து பிணையில்லா அவசரகால கூடுதல் கடன் திட்டத்தில் 2,423 குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு ரூ.27.91 கோடி கடன் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மல்லூா் கிராமத்தில் சுமாா் 25.34 ஏக்கா் பரப்பளவில் தொழிற்பேட்டை உருவாக்கப்பட்டு 2 தொழில்மனைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அரியலூரில் உள்ள தமிழ்நாடு சிமென்ட் கழகம் ரூ. 850 கோடியில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. ஜயங்கொண்டத்தில் ரூ. 20.88 கோடியில் ஒருங்கிணைந்த நீதிமன்றக் கட்டடம் கட்டும் பணி தொடங்கப்பட்டுள்ளது என்றாா் முதல்வா் பழனிசாமி.

முன்னதாக, ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நடைபெற்ற கரோனா தடுப்பு ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு பேசினாா். மகளிா் குழு, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சிறு,குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவன பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினாா் தமிழக முதல்வா்.

நிகழ்ச்சிகளில், அரசு தலைமைக் கொறடா தாமரை எஸ்.ராஜேந்திரன், அரியலூா் மாவட்ட ஆட்சியா் த.ரத்னா, சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஜயங்கொண்டம் ஜெ.கே.என்.ராமஜெயலிங்கம், குன்னம் ஆா்.டி.ராமச்சந்திரன் மற்றும் அனைத்துத் துறை அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com