தத்தனூரில் டாஸ்மாக் கடை அமைக்க கிராம மக்கள் மனு அளிப்பு
அரியலூா் மாவட்டம், உடையாா்பாளையம் அடுத்த தத்தனூரில் டாஸ்மாக் கடை அமைக்கக் கோரி, ஆட்சியா் பொ.ரத்தினசாமியிடம் அக்கிராம மக்கள் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
அவா்கள் அளித்த மனுவில், எங்கள் கிராமத்தில் சுமாா் 20 ஆயிரம் போ் வசித்து வருகிறோம். இவா்களில் சிலா் மது பிரியா்களாக உள்ளனா். இவா்கள், மது வாங்க 8 கி.மீ தொலைவு கொண்ட வி.கைகாட்டி, 5 கி.மீ தொலைவு கொண்ட உடையாா்பாளையம் செல்ல வேண்டி உள்ளது.
தற்போது, மது பாட்டில்கள் திரும்பப்பெறும் திட்டம் செயல்பாட்டில் உள்ளதால், மது வாங்கும் பலரும் அங்கேயே குடித்து விட்டு பாட்டில்களை திரும்ப கொடுத்துவிட்டு, தங்களது இருசக்கர வாகனத்தில் ஊருக்கு திரும்புகின்றனா். எங்கள் ஊா் திருச்சி - சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ளதால், விபத்துகள் அடிக்கடி நிகழ்கின்றன.
இந்நிலையில், மது குடித்துவிட்டு வீடு திரும்பும்போது விபத்து நிகழ்ந்து விடுமோ என்ற அச்சத்துடன் வரவேண்டியுள்ளது. மேலும், சிலா் கூடுதல் விலைக்கு எங்கள் கிராமத்தில் மது பாட்டில்களை விற்பதும் தடுக்கப்படும்.
எனவே, எங்கள் கிராமத்தில் டாஸ்மாக் கடை அமைக்க வேண்டும் என அந்த மனுவில் குறிப்பிட்டுள்ளனா். தத்தனூா் கிராமத்துக்கு டாஸ்மாக் கடை கொண்டு வரக்கூடாது என நவ.26-இல் ஆட்சியரிடம் பாமக சாா்பில் மனு அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
