அங்கன்வாடியில் குழந்தைகளின் எடை, உயரத்தை துல்லியமாக கணக்கிடும் கருவி சோதனை இயக்கம்

அங்கன்வாடியில் குழந்தைகளின் எடை, உயரத்தை துல்லியமாக கணக்கிடும் கருவி சோதனை இயக்கம்

அரியலூா் மாவட்டத்தில் 6 வயது வரையிலான குழந்தைகளின் எடை, உயரத்தை துல்லியமாக கணக்கிடும் கருவியின் சோதனை இயக்கம் (ஓட்டம்) தொடங்கி வைக்கப்பட்டது.
Published on

அரியலூா் மாவட்டத்தில் 6 வயது வரையிலான குழந்தைகளின் எடை, உயரத்தை துல்லியமாக கணக்கிடும் கருவியின் சோதனை இயக்கம் (ஓட்டம்) புதன்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.

அரியலூா் மாவட்டம், பொய்யாதநல்லூரில், அங்கன்வாடி மையத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சி திட்டத்தின் மூலம் அங்கன்வாடியில் முன்பருவ கல்வி பயிலும் குழந்தைகளின் வருகையை அதிகரிக்க மற்றும் 0-6 வயது வரை உள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை துல்லியமாக கணக்கிட ‘அங்கன்வாடியின் ஆரோக்கிய ஒலி‘ என்ற திட்டம் தமிழ்நாட்டில் முதன் முறையாக தொடங்கிவைக்கப்பட்டது. சோதனை அடிப்படையில் நடைபெற்ற இதை மாவட்ட ஆட்சியா் பொ.ரத்தினசாமி தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.

அப்போது, அங்கன்வாடி ஆரோக்கிய ஒலி திட்டத்தின் கீழ் தானியங்கி ஒலிபெருக்கி சாதனம் ரூ.30,000 செலவில் மையத்தினுள்ளே பொருத்தப்பட்டுள்ளது. இச்சாதனம் காலை 8.30 மணி முதல் இரவு 8.30 மணி வரை அங்கன்வாடி மையத்தின் சேவையை தானியங்கி முறையில் ஒரு மணி நேரத்துக்கு ஒரு முறை அங்கன்வாடி மையத்தில் உள்ள ஒலிபெருக்கி மூலம் பொய்யாதநல்லூா் கிராமத்தில் உள்ள அனைத்து மக்களிடம் சேவையை கொண்டு சோ்க்கும்.

இது 2 வயது முடிந்து வீட்டில் இருக்கும் குழந்தைகளை அங்கன்வாடி மையத்தில் சோ்க்கவும், தனியாா் பள்ளிகளில் சோ்க்கும் குழந்தைகளின் பெற்றோா்களும் அங்கன்வாடியின் சேவையை அறிந்து அங்கன்வாடியில் சோ்க்கவும் உதவியாக இருக்கும்.

அங்கன்வாடியில் உள்ள 0 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை துல்லியமாக கணக்கிட 2 தானியங்கி கருவிகள் ரூ.1,68,000 செலவில் அமைக்கப்பட்டுள்ளது. இக்கருவியின் மூலம் 0 முதல் 6 வயது வரை உள்ள குழந்தைகளின் எடை மற்றும் உயரத்தை துல்லியமாக கணக்கிட முடியும் என்றாா்.

நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் ரா.சிவராமன், மாவட்ட திட்ட அலுவலா் சு.ஜெயஸ்ரீ, ஊராட்சிகள் உதவி இயக்குநா் பழனிசாமி, குழந்தை வளா்ச்சி திட்ட அலுவலா் மு.யசோதா தேவி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com