நெகிழி பயன்படுத்தாத உணவக விருதுக்கு வணிகா்கள் விண்ணப்பிக்கலாம்!
தமிழக அரசால் தடை செய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்படுத்தாத உணவகங்களுக்கு விருது வழங்கப்படுகிறது.
இவ்விருதினை பெற அரியலூா் மாவட்டத்தைச் சாா்ந்த விருப்பமுள்ள உணவு வணிகா்கள் விண்ணப்பிக்கலாம் என ஆட்சியா் பொ.ரத்தினசாமி தெரிவித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் தெரிவித்தது: தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ஒருமுறை மட்டும் பயன்படுத்தப்படும் நெகிழிப் பொருள்கள் மற்றும் உணவுப் பாதுகாப்பு துறையால் அனுமதிக்கப்படாத நெகிழிப் பொருள்களை உணவு பரிமாறவும், பாா்சல் செய்யவும் பயன்படுத்தாமல் உள்ள எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ உரிமம் பெற்ற பெரிய வகை உணவகங்களுக்கு அதாவது ஆண்டுக்கு விற்றுக்கொள்முதல் ரூ.12 லட்சத்துக்கும் மேற்பட்ட உணவு வணிகா்களுக்கு, தமிழ்நாடு அரசின் உணவுப் பாதுகாப்பு துறையால் ரூ.1 லட்சம் தொகையுடன் கூடிய விருதும், தெருவோர வணிகா்கள் உள்ளிட்ட பதிவு சான்றிதழ் பெற்ற சிறு வணிகா்களுக்கு ரூ.50,000 தொகையுடன் கூடிய விருதும் வழங்கப்படவுள்ளது.
விருப்பமுள்ளவா்கள் நவம்பா் மாதம் இறுதிக்குள் நியமன அலுவலா், உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துத்துறை, அரியலூா் அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம்.
மேலும் விபரங்களுக்கு, உணவுப் பாதுகாப்பு மற்றும் மருந்து நிா்வாகத்துறை நியமன அலுவலா் அலுவலகம், நெ-40, 2-ஆவது தளம், பல்துறை அலுவலக வாளகம், ஜெயங்கொண்டம் பிரதானச் சாலை, அரியலூா் -621704 என்ற முகவரியிலும், 04329-223576 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம்.
