திருமானூா் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை திறக்கக்கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

திருமானூா் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை திறக்கக்கோரி விவசாயிகள் முற்றுகைப் போராட்டம்

திருமானூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தை வெள்ளிக்கிழமை முற்றுகையிட்ட விவசாயிகள்.
Published on

அரியலூா் மாவட்டம், திருமானூரில் வெள்ளிக்கிழமை திறக்கப்படாமல் இருந்த கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை திறக்கக் கோரி, விவசாயிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருமானூரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் இயங்கி வருகிறது. இங்கு விவசாய கடன், நகைக்கடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்த கடன் சங்கத்தில் 2,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கணக்கு வைத்து கடன் பெற்று வருகின்றனா்.

இந்நிலையில், இந்த கடன் சங்கத்தில் பணியில் இருந்த செயலா் ராஜசெல்லம் வேறு வங்கிக்கு அண்மையில் மாற்றம் செய்யப்பட்டாா். அனைத்து கோப்புகளிலும் கையெழுத்திட்ட அவா், மாற்றம் செய்யப்பட்ட கடன் சங்க அலுவலகத்துக்கு செல்லாமல் மீண்டும் இங்கேயே வந்து பணியில் இருந்ததால், பணி முழுவதும் கடந்த சில தினங்களாக பாதிக்கப்பட்டது. இதனிடையே திருமானூா் கடன் சங்க அலுவலகத்துக்கு வந்த புதிய செயலா், மருத்துவ விடுப்பெடுத்து சென்றுவிட்டாா்.

இதனால் மகளிா் சுய உதவிக்குழுவினா் பணம் செலுத்துவது, விவசாயிகள் விவசாய கடன் பெறுவது உள்ளிட்ட அனைத்து பணிகளும் தாமதமாகி வந்தன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை வங்கியை திறக்காமல் ராஜசெல்லம் இருந்துள்ளாா். இதனால் ஆத்திரமடைந்த விவசாயிகள் கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை முற்றுகையிட்டனா். மேலும், புதிய செயலா் பணிக்கு திரும்ப வேண்டும். பழைய செயலா் வெளியே செல்ல வேண்டும். கூட்டுறவு கடன் சங்க அலுவலகத்தை உடனடியாக திறக்க வேண்டும் என வலியுறுத்தினா்.

இதுகுறித்து தகவலறிந்து வந்த கூட்டுறவுத்துறை மாவட்ட பதிவாளா் இம்தியாஸ் உள்ளிட்ட அலுவலா்கள், ராஜசெல்லம் இருசக்கர வாகனத்திலிருந்து வங்கி சாவியை எடுத்து திறந்தனா். இதையடுத்து வங்கிப் பணிகள் தொடங்கின. இதனால் திருமானூா் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் பிற்பகல் வரை பரபரப்பு காணப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com