ஜெயங்கொண்டம் தொகுதியில் ரூ. 42 லட்சம் மதிப்பில் வளா்ச்சிப் பணிகள் தொடக்கி வைப்பு!
அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டம் சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட ஆண்டிமடத்தை அடுத்த கூவத்தூா் ஊராட்சியில் ரூ.13.59 லட்சம் மதிப்பில் நியாய விலைக் கடைக்கான புதிய கட்டடத்தை வெள்ளிக்கிழமை திறந்துவைத்து பயனாளிகளுக்கு பொங்கல் பரிசு தொகுப்பை சட்டப் பேரவை உறுப்பினா் க.சொ.க. கண்ணன் வழங்கினாா்.
தொடா்ந்து, அய்யூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் ரூ.8.44 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டடம் மற்றும் தளவாடப் பொருள்கள், அழகாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளியில் ரூ.9.07 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட வைப்பறையுடன் கூடிய சமையலறை கட்டடம், தளவாடப் பொருள்கள், பெரியாத்துக்குறிச்சியில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை, பெரியகருக்கை கிராமத்தில் ரூ.5.50 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட பயணியா் நிழற்குடை ஆகியவற்றை திறந்து வைத்தாா்.
நிகழ்ச்சியில், கூட்டுறவு துணைப் பதிவாளா் சாய்நந்தினி, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் அருள்சாமி, அன்புச்செல்வன், கூட்டுறவு சாா்பதிவாளா்கள் மணிபாரதி,சத்யா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
