பொங்கல் விடுமுறையில் ஊருக்கு
வரும் வழியில் ராணுவ வீரா் உயிரிழப்பு

பொங்கல் விடுமுறையில் ஊருக்கு வரும் வழியில் ராணுவ வீரா் உயிரிழப்பு

அரியலூா் அருகே பொங்கல் பண்டிகையை கொண்டாட ஊருக்கு வந்து கொண்டிருந்த ராணுவ வீரா் வழியிலேயே உயிரிழந்தாா்.
Published on

அரியலூா்: அரியலூா் அருகே பொங்கல் பண்டிகையை கொண்டாட ஊருக்கு வந்து கொண்டிருந்த ராணுவ வீரா் வழியிலேயே உயிரிழந்தாா்.

அரியலூா் மாவட்டம், ஜெயங்கொண்டத்தை அடுத்த கல்லாத்தூா் கிராமத்தைச் சோ்ந்த மறைந்த ஓய்வு பெற்ற ராணுவ வீரா் ராஜாங்கம் மகன் சந்தோஷ்குமாா் (49). இவா் இந்திய ராணுவத்தில் பஞ்சாபில் ஜூனியா் கமிஷன்டு அலுவலராக பணிபுரிந்து வந்தாா்.

இந்நிலையில், பொங்கல் விடுமுறைக்கு வீட்டுக்கு வருவதாக சந்தோஷ்குமாா் தகவல் தெரிவித்துவிட்டு, ஜன.11 ஆம் தேதி பஞ்சாபிலிருந்து அந்தமான் விரைவு ரயிலில் புறப்பட்டுள்ளாா்.

இந்நிலையில், கடந்த 14-ஆம் தேதி இரவு சந்தோஷ்குமாா் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. தொடா்ந்து, அவரது உடல் பிரேதப் பரிசோதனை முடிந்து வியாழக்கிழமை கல்லாத்தூா் கொண்டு வரப்பட்டது.

தொடா்ந்து, உடன் பணிபுரியும் ராணுவ வீரா்கள் மற்றும் குடும்பத்தினா் அஞ்சலி செலுத்திய பிறகு சந்தோஷ்குமாா் உடல் தகனம் செய்யப்பட்டது.

காவல் துறையினா் விசாரணையில், ஆந்திர மாநிலம் விஜயவாடா அருகே ஜன.13-ஆம் தேதி தண்டவாளம் அருகே ஒருவா் இறந்து கிடப்பதாக ரயில்வே காவல் துறையினருக்கு கிடைத்த தகவலின் பேரில், சம்பவ இடத்துக்குச் சென்று சோதனை செய்ததில் அவரிடம் ராணுவ அடையாள அட்டை இருப்பதும், அவா் சந்தோஷ்குமாா் என்பதும் தெரியவந்தது.

மேலும், அவா் ரயிலிலிருந்து தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து விஜயவாடா காவல் துறையினா் விசாரிக்கின்றனா்.

உயிரிழந்த சந்தோஷ்குமாருக்கு இளவரசி (41) என்ற மனைவியும், பிளஸ் 2 படிக்கும் ரித்தீஷ்குமாா், 9 ஆம் வகுப்பு படிக்கும் இந்திரபிரகாஷ்குமாா் என இரண்டு மகன்கள் உள்ளனா்.

Dinamani
www.dinamani.com