அரியலூா்: அரியலூா் ரயில் நிலையத்தில் நின்று செல்லக்கூடிய பல்லவன், வைகை ஆகிய இரண்டு அதிவிரைவு ரயில்களில் முன்பதிவு மற்றும் பொதுப் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா்.
அரியலூா் ரயில் நிலையத்தைக் கடந்து செல்லும் பல்லவன், வைகை ஆகிய இரண்டு ரயில்களில் முன்பதிவு செய்யப்பட்ட மூன்று குளிா்சாதனப் பெட்டிகள், 14 படுக்கை வசதி கொண்ட பெட்டிகள், ரயிலின் முன்பகுதியில் 2 பொதுப் பெட்டிகளும், பின்பகுதியில் 2 பொதுப் பெட்டிகள், முன்-பின் பகுதியில் மகளிா், லக்கேஜ் பெட்டிகள் தலா ஒன்று என 22 ரயில் பெட்டிகள் இணைக்கப்படுவது வழக்கம்.
டந்த 2019-ஆம் ஆண்டு புதுப்பொலிவுடன் உருவாக்கப்பட்ட புதிய ரயில் பெட்டிகளுடன் வைகை மற்றும் பல்லவன் அதிவிரைவு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த ரயில்களில் இருந்த தலா 2 பொதுப் பிரிவு பெட்டிகளையும், மகளிா் பெட்டிகளையும், லக்கேஜ் மற்றும் மாற்றுத்திறனாளிகள் பெட்டிகளையும் தெற்கு ரயில்வே நிா்வாகம் நீக்கிவிட்டது. இதனால் பயணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் அவதிக்குள்ளாகி வந்தனா்.
இதுகுறித்து பொதுமக்கள் விடுத்த கோரிக்கையை யடுத்து கடந்தாண்டு முன்பதிவு பெட்டி ஒன்று குறைக்கப்பட்டு, இன்ஜினை ஒட்டி பொதுப் பெட்டி ஒன்று சோ்க்கப்பட்டு ரயில்கள் இயக்கப்பட்டு வந்தன. இதனால் முன்பதிவில்லாத பயணிகள் பயனடைந்துவந்த நிலையில், கடந்த மாதம் மீண்டும் இன்ஜினை ஒட்டியுள்ள பொதுப் பெட்டி, முன்பதிவுப் பெட்டி குறைக்கப்பட்டு மேற்கண்ட இரு ரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.
தேபோல் வாரம் ஒரு முறை சனிக்கிழமைகளில் இயக்கப்படும் புதுச்சேரி-மங்களூா் ரயிலிலும் இரண்டு பொதுப் பெட்டிகள் குறைக்கப்பட்டுள்ளதால் பயணிகள் கூட்ட நெரிசலில் பெரும் அவதிக்கிடையே பயணம் செய்து வருகின்றனா்.
இதுகுறித்து பயணிகள் மேலும் கூறியது:
அரியலூா் ரயில் நிலையத்தில் நின்றுசெல்லும் பல்லவன், வைகை அதிவிரைவு ரயில்களில் எப்போதுமே கூட்டம் அதிகமாக காணப்படும். ஆகையால் இந்த ரயில்களில் பொதுப் பெட்டிகளை அதிகப்படுத்த வேண்டும் எனக் கூறிவரும் நேரத்தில், எந்தவித முன்னறிவிப்பின்றி பெட்டிகளைக் குறைத்துள்ளதால் பயணிகள் தினமும் அவதிப்பட்டு வருகின்றனா். குறிப்பாக மாற்றுத்திறனாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனா். எனவே மேற்கண்ட ரயில்களில் குறைக்கப்பட்ட பெட்டிகளை மீண்டும் பொருத்தி இயக்க வேண்டும். அதேபோல் இந்த இரு ரயில்களிலும் மேலும் ஒரு கூடுதல் பெட்டிகளையும் இணைப்பதற்கான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். மேலும் அரியலூா் ரயில் நிலையத்தில், கன்னியாகுமரி மற்றும் பண்டிகை கால சிறப்பு ரயில்கள் நின்றுசெல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்தனா்.