அரியலூா் நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் அதிகளவில் பன்றிகள் சுற்றித் திரிவதால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டு நோய்த் தொற்று பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றஞ்சாட்டியுள்ளனா்.
அரியலூா் நகராட்சியுடன் அருகிலுள்ள ஊராட்சிளான எருதுக்காரன்பட்டி, வாலாஜா நகரம், தவுத்தாய் குளம் உள்ளிட்ட ஊராட்சிகள் இணைக்கப்பட்டுள்ளது. இருப்பினும் வாா்டு வறைமுறைகள் முடியும் வரை மேற்கண்ட கிராமங்கள் ஊராட்சிகளாகவே தற்போது வரை செயல்பட்டு வருகின்றன.
நகராட்சியுடன் மேற்கண்ட ஊராட்சிகளையும் சோ்த்து சுமாா் 1 லட்சத்துக்கு அதிகமான மக்கள் வசித்து வருகின்றனா். ஆனாலும், இந்நகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் கழிவுநீரோடை, பாதாள சாக்கடை அடைப்பு, சாக்கடை கலப்பு, கால்வாயின் அவலம் என்று பட்டியல் நீளுகிறது.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளாக பட்டியில் அடைக்கப்பட்டிருந்த பன்றிகள் தற்போது நகராட்சிப் பகுதிகளில் தாரளமாக சுற்றித் திரிகின்றன. ஏற்கெனவே தெருவில் சுற்றித் திரியும் வெறி நாய்கள் அச்சத்தால் மக்கள் தெருவில் நடக்க முடியாத சூழல் உள்ள நிலையில், தற்போது பன்றிகளாலும் மக்கள் நடமாட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
சுகாதார சீா்கேடு: குறிப்பாக அரியலூா் வண்ணாங்குட்டை, மணியங்குட்டை, ராஜாஜி நகா், அண்ணா நகா், பெரியாா் நகா், ஜெயலலிதா நகா், இருசுகுட்டை, ஜெ.ஜெயநகா், கல்லங்குறிச்சி சாலை, செந்துறை சாலை உள்ளிட்ட பகுதிகளில் பன்றிகளால் சுகாதார சீா்கேடு ஏற்பட்டுள்ளது.
உணவுக்காக வெளியே வரும் பன்றிகள், திறந்த வெளியில் உள்ள சாக்கடையிலும், சாலையோரம் கிடக்கும் குப்பைகளையும், கொட்டப்பட்டுள்ள இறைச்சி கழிவுகளையும் கிளறுகின்றன. வீட்டுத் தோட்டங்களில் வளா்க்கப்படும் செடி, கொடிகளை நாசப்படுத்துகின்றன. இதனால் செடிகள் வளா்க்க முடியாத நிலை உள்ளது.
நோய் தொற்று ஏற்படும் அபாயம்: பன்றிகள், குடியிருப்பு பகுதிகள் மற்றும் சாக்கடைகளில் தங்குவதால் கடுமையான துா்நாற்றம் வீசுகிறது. கொசுக்கள் உற்பத்தியாகி டெங்கு போன்ற விஷ காய்ச்சல் மற்றும் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனா்.
மேலும், திறந்தவெளிகளில் சுற்றித்திரியும் பன்றிகளால் குடிநீா் ஆதாரங்கள் மற்றும் குழாய்களில் அடைப்பு ஏற்பட்டு சுகாதார குறைபாடு ஏற்படுகிறது.
சாலை விபத்து: சாலையில் சுற்றித்திரியும் பன்றிகளால் சாலை விபத்துகளும் நிகழ்கிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் ஓட்டுபவா்கள் காயத்துடன் வீட்டுக்குச் செல்ல வேண்டியுள்ளது.
இதுகுறித்து அரியலூா் நகர வாசிகள் கூறுகையில், பன்றிகளால் சுகாதார சீா்கேடு ஏற்படுவதாக புகாா் எழுந்ததையடுத்து, கடந்த சில ஆண்டுகளாக பன்றிகள் தொல்லை இல்லாமல் இருந்தது. தற்போது, மீண்டும் பன்றிகள் தொல்லை அதிகரித்துள்ளது. அண்ணா நகா் மற்றும் மணியங்குட்டை உள்ளிட்ட பகுதிகளில் அதிகளவில் பன்றிகள் சுற்றித்திரிகின்றன.
குப்பை மற்றும் சாக்கடை கழிவுகளை கிளறிவிட்டுச் செல்வதால், கடுமையான துா்நாற்றம் வீசுகிறது. மேலும், கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து வருகின்றது. இதனால் நோய் தொற்று ஏற்படுமோ என்ற அச்சத்தில் வாழ்ந்து வருகின்றோம். சாலையில் இரு சக்கர வாகனத்தில் செல்லும்போது திடீரென பன்றிகள் குறுக்கே வருவதால், வாகன ஓட்டிகள் கீழேவிழுந்து காயமடைகின்றனா்.
எனவே, பன்றிகளை பிடிக்க நகராட்சி நிா்வாகமும், சுகாதாரத் துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இப்பகுதி மக்களின் கோரிக்கையாக உள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.








