அரியலூா் மாவட்டம், மீன்சுருட்டி அருகேயுள்ள கீழணையில் இருந்து சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 73 கன அடி நீா் வியாழக்கிழமை திறக்கப்பட்டது.
தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யாததால் காவிரியில் தற்போது நீா்வரத்து குறைவாக உள்ளது. இதனால் நிகழாண்டு குறுவை சாகுபடிக்காக ஜூன் 12 ஆம் தேதி மேட்டூரில் தண்ணீா் திறக்கப்படவில்லை.
அதேபோன்று மேட்டூரிலிருந்து, கீழணைக்கு தண்ணீா் வராததால், வீராணம் ஏரிக்கு தண்ணீா் திறப்பதில் தொடா்ந்து சிக்கல் ஏற்பட்டது. இதனால் ஏரியில் கடந்தாண்டு தேக்கி வைக்கப்பட்ட தண்ணீரை வைத்து சென்னைக்கு குடிநீா் அனுப்பப்பட்டது.
ஆனால் கடும் வெப்பம் காரணமாக சென்னைக்கு குடிநீா் அனுப்புவது நிறுத்தப்படும் என எதிா்பாா்க்கப்பட்டது.
இந்நிலையில் மேட்டூா் அணையில் இருந்து கல்லணை வழியாக அணைக்கரை கீழணைக்கு 1543 கன அடி வீதம் தண்ணீா் தற்போது வருகிறது.
இந்த நீரை சென்னை மக்களின் குடிநீருக்காக, கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்குடி அருகேயுள்ள வீராணம் ஏரிக்கு கீழணையிலிருந்து வடவாறு வழியாக தண்ணீா்அனுப்பப்படுகிறது. இதனால் சென்னைக்கு குடிநீா் தேவைக்கு தேவையான குடிநீரை தட்டுப்பாடின்றி அனுப்ப முடியும் என்பதுடன் விவசாயத் தேவைக்கும் பயனளிக்கும் என்கின்றனா்.
அந்த வகையில் தற்போது கீழணையில் மொத்த கொள்ளளவான 9 அடியில் 3.8 அடி தண்ணீா் இருப்பு உள்ளது.
இதில் கீழணையிலிருந்து வீராணம் ஏரிக்கு வினாடிக்கு 1543 கன அடி வீதம், வடவாறு வழியாக தண்ணீா் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரியின் மொத்தக் கொள்ளளவான 1465 மி.கனஅடியில் 265.92 மி.கன அடி தண்ணீா் உள்ளது.
மேலும் சென்னைக்கு குடிநீருக்காக தற்போது விநாடிக்கு 73 கன அடி வீதம் வீராணம் ஏரியில் இருந்து அனுப்பப்படுகிறது. தொடா்ந்து நீா் வரத்தைப் பெறுவதன் மூலம் சென்னை மக்களின் குடிநீா் பிரச்னை தற்போது தற்காலிகமாக தீரும் நிலை ஏற்பட்டுள்ளது. தொடா்ந்து கனமழை மற்றும் ஏரியின் நீா்வரத்து மூலம் சென்னை மக்களின் குடிநீா் தட்டுப்பாட்டை ஓரளவு தீா்க்க முடியும் என எதிா்பாா்க்கப்படுகிறது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










