கரூரில் பள்ளிவாசலுக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதை கண்டித்து, பள்ளிவாசல் நிர்வாகத்தினர் புதன்கிழமை உண்ணாவிரதம் இருந்தனர்.
கரூர் திருமாநிலையூரைச் சேர்ந்தவர் வேலுசாமி(32). இவர் அப்பகுதியில் உள்ள பள்ளிவாசலுக்குச் சொந்தமான நிலத்தை குத்தகைக்கு எடுத்து பராமரித்து வருகிறார். இந்நிலையில், அந்த நிலத்தில் இருந்த தகரக்கொட்டகையை கடந்த 13-ஆம் தேதி இரவு மர்ம நபர்கள் சேதப்படுத்தியுள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கக்கோரி, வேலுசாமி, தனது குடும்பத்தினருடன் செவ்வாய்க்கிழமை இரவு முதல் திடீரென உண்ணாவிரதப் போராட்டத்தை தொடங்கினார்.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் கு.கோவிந்தராஜ், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.கே.ராஜசேகரன், கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, வட்டாட்சியர் அருள் ஆகியோர் வேலுசாமியை சந்தித்து, உண்ணாவிரதத்தை கைவிடுமாறு வலியுறுத்தினர்.
ஆனால், தனது தகரக்கொட்டகையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே போராட்டத்தை கைவிடுவேன் எனக் கூறி, அவர் தொடர்ந்து உண்ணாவிரதம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், வேலுசாமி குத்தகைக்கு எடுத்திருக்கும் பள்ளிவாசலுக்குச் சொந்தமான 2.57 ஏக்கர் நிலத்தை அதே பகுதியைச் சேர்ந்த வேறு ஒருவர் ஆக்கிரமித்து, அவரது பெயரில் பட்டா மாற்றியதாக கூறப்படுகிறது. இதனால் பள்ளிவாசலுக்குச் சொந்த மான நிலத்தை ஆக்கிரமித்தவர்கள் மீது நடவடிக்கை எடுத்து, மீண்டும் நிலத்தை பள்ளிவாசலிடம் ஒப்படைக்க வேண்டும், வேலுசாமி தகரக்கொட்டையை சேதப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக்கூறி வேலுசாமிக்கு ஆதரவாக பள்ளிவாசல் நிர்வாகத்தினரும் புதன்கிழமை காலை முதல் உண்ணாவிரதம் இருந்தனர்.
பள்ளிவாசல் நிர்வாகி எம்.ஷேக்அமானுல்லா தலைமையில் மனித நேய ஜனநாயக கட்சி மாவட்ட நிர்வாகி எஸ்.ஷேக் இஸ்மாயில் உள்ளிட்டோர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அவர்களிடம் கரூர் வட்டாட்சியர் அருள், "நிலத்தை அளவீடு செய்து, ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட இடத்தை மீட்க நடவடிக்கை எடுக்கப்படும்' எனக் கூறினார். இருப்பினும், அவர்கள் உண்ணாவிரதத்தை கைவிட மறுத்து, போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.