தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

"தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு அனைவரும் பாடுபட வேண்டும்'

உணர்வு கலந்த உன்னத மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.

News image
Updated On :30 ஏப்ரல் 2018, 1:42 am

DIN

உணர்வு கலந்த உன்னத மொழியான தமிழ் மொழியின் வளர்ச்சிக்கு ஒவ்வொருவரும் பாடுபட வேண்டும் என்றார் மாவட்ட ஆட்சியர் த. அன்பழகன்.
கரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தமிழ்க் கவிஞர்கள் நாள் விழாவிற்கு தலைமை வகித்து அவர் மேலும் பேசியது:  
தமிழ்ப் பேச்சு என்றும் நம் உயிர் மூச்சாக இருக்க வேண்டும்.  சிங்கப்பூர், இலங்கை நாடுகளில் தமிழ்மொழி ஆட்சிமொழிகளில் ஒன்றாக உள்ளது. 
பல நாடுகளில் ஆட்சிமொழியாகத் திகழும் செம்மார்ந்த தமிழ்மொழி பல்வேறு கால கட்டங்களில் வாழ்ந்த புலவர்கள், கலைஞர்களால் போற்றப்பட்டும், வளர்க்கப்பட்டும்,  இலக்கிய இலக்கண செழுமை மிகுந்த மொழியாக விளங்குகிறது.  
இந்த மொழியை உலகெங்கும் கொண்டு செல்ல தமிழர்கள் தமிழில் பேசுவதும் உரையாடுவது அவசியம். சங்கம் வைத்து வளர்த்த தமிழ்மொழி மென்மேலும் வளர அனைவரும் பாடுபட வேண்டும். கரூரில் திருவள்ளுவர் சிலை உள்ளிட்ட திருக்குறள் பேரவை சார்பில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். புத்தகம் வாசிப்பு பழக்கம் குறைந்து கொண்டே போகிறது. தமிழுணர்வு, அறிவையும் ஒருசேர  கொடுப்பவை புத்தகங்கள். அவற்றை வாசிப்பது அவசியம்.
தமிழ்மொழி வளர உதவிய கலைஞர்களைப் பாராட்ட வேண்டும் என்ற அடிப்படையில் அரசு, பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த தினமான ஏப். 29-ஐ தமிழ்க் கவிஞர்கள் நாளாக அறிவித்து கொண்டாடி வருகிறது.  
இந்த நாளில் வாசிப்பு பழக்கத்தை வழக்கமாகிக் கொள்ள உறுதி மேற்கொள்ள வேண்டும் என்றார்.  
விழாவில், சங்க கால புலவர்களின் புலமையும், பண்பு நலனும் என்ற தலைப்பில் தமிழ் செம்மல் ப.எழில்வாணனும், கருவூர் பூதஞ்சாத்தனார் கவிநயம் என்ற தலைப்பில் மேலை.பழனியப்பனும் சிறப்பு சொற்பொழிவாற்றினர்.  
இதில் கோட்டாட்சியர் கு. சரவணமூர்த்தி, தமிழ் வளர்ச்சித்துறை துணை இயக்குநர் அன்புச்செழியன்,  தமிழறிஞர்கள் கடவூர் மணிமாறன், தென்னிலை கோவிந்தன், தமிழன்குமாரசாமி, க.பா. பாலசுப்ரமணி, பாவலர் அழகரசன், ப.எழில்வாணன், புலவர் குழந்தை, திருக்குறள் அறக்கட்டளையின் நிறுவனர் ஆர்த்தி ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
விழாவிற்கு முன்னதாக வட்டாட்சியர் அலுவலகம் முன் அமைந்துள்ள கருவூர் புலவர்கள் பன்னிருவர் நினைவு தூணிற்கு மலர்தூவி மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.

கிளைச் சிறையில் 
ஆட்சியர் ஆய்வு
கரூர் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் செயல்படும் கிளைச்சிறைக்கு திடீரென ஆட்சியர் சென்றார். அங்குள்ள கைதிகளைச் சந்தித்து, இதுவரை நடந்தவைகளை எண்ணாமல் இனி வரக்கூடிய காலங்களில் நல்ல வாழ்க்கை வாழ முற்பட வேண்டும். சிறையில் இருக்கும்போது புத்தகங்கள் வாசிப்பது, யோகா செய்வது, தியானம் உள்ளிட்ட பயிற்சிகளை மேற்கொள்ள வேண்டும். சிறைச்சாலையில் இருப்பதை ஒரு நல்ல களமாக எண்ணி சிறந்த வாழ்க்கை வாழ மனம் மாற வேண்டும்.  யோகாசனம் கற்றுத்தர விரைவில் ஏற்பாடு செய்வதாகவும் தெரிவித்து இனிப்புகளை வழங்கி விரைவில் நல்ல மாற்றம் பெற வேண்டும் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.