தொடரும் இழுபறி! பியூஷ் கோயல் வருகை ரத்து! இபிஎஸ் தில்லி பயணம்! திமுகவில் இணைந்தார் ரஞ்சனா நாச்சியார்! திராவிட உடன்பிறப்புகள்! முதல்வர் ஸ்டாலின் உகாதி வாழ்த்து! இந்தியா - பாகிஸ்தான் இடையே அணு ஆயுத மோதல் அபாயம்: அமெரிக்க உளவுத்துறைதங்கம் விலை சவரனுக்கு ரூ. 2,160 குறைவு!
/

1.16 லட்சம் டன் உணவு தானிய உற்பத்திக்கு இலக்கு

கரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 1.16 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) ச. சூர்யபிரகாஷ்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:44 am

DIN

கரூர் மாவட்டத்தில் நிகழாண்டில் 1.16 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது என்றார் மாவட்ட ஆட்சியர் (பொ) ச. சூர்யபிரகாஷ்.
கரூர் மாவட்டம், பழைய ஜெயங்கொண்டத்தில் புதன்கிழமை நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாம் நிறைவு விழாவுக்குத் தலைமை வகித்து, 180 பயனாளிகளுக்கு ரூ. 26.26 லட்சத்தில் நலத்திட்ட உதவிகளை வழங்கி மேலும் அவர் பேசியது:
மாவட்டத்திலுள்ள 1552 அங்கன்வாடி மையங்களில் கர்ப்பகாலப் பராமரிப்பு மற்றும் வளரிளம்பெண்களுக்கு  இரும்புச் சத்து மாத்திரைகள் வழங்கப்படுகின்றன. குழந்தைகளுக்கு  உயரம் மற்றும் எடை எடுத்து வளர்ச்சி கண்காணிக்கப்படுகிறது. மேலும், முன்பருவக் கல்வி  செயல்படுத்தப்படுவதுடன் முட்டையும், 5 வகையான சத்துணவும் வழங்கப்படுகிறது. குழந்தைத் தொழிலாளர் மற்றும் குழந்தை திருமண முறை சட்டப்படி தடுக்கப்பட்டுள்ளது. குழந்தைகளின் பாதுகாப்பு குறித்து 1098 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணில் புகார் தெரிவிக்கலாம். கால்நடைப் பராமரிப்புத் துறை மூலம் கிராமப்புற ஏழை எளிய பெண்களின்  பொருளாதார முன்னேற்றத்துக்காக விலையில்லா ஆடுகள் வழங்கப்படுகின்றன.  அவ்வாறு வழங்கப்படும் ஆடுகள் மாதத்தின்  கடைசி சனிக்கிழமையில் பரிசோதனை செய்யப்படுகின்றன. மேலும் நாட்டுக்கோழி வளர்ப்பை ஊக்குவிக்க  50 சதவிகித மானியமும் வழங்கப்படுகிறது. செம்மறி ஆடுகளின் உற்பத்தியைப் பெருக்க  நிகழாண்டில் செயற்கை முறை கருவூட்டல் முறை செயல்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் வேளாண் துறையின் மூலம் நிகழாண்டில் 1.16 லட்சம் டன் உணவு தானியம் உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.  நடப்பாண்டில் காரிப் பருவத்தில் 700 விவசாயிகள் ரூ. 1.82 கோடியிலும்,  ராபி பருவத்தில் 2500 விவசாயிகள் ரூ.13.44 கோடியிலும் பயிர்க் காப்பீடு செய்துள்ளனர் என்றார் அவர். செய்தி- மக்கள் தொடர்புத் துறை, வேளாண் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டம் உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்பில்  சிறுகண்காட்சி அரங்குகள் அமைக்கப்பட்டு, துறை சார்ந்த திட்டங்கள் குறித்த விவரங்கள் அளிக்கப்பட்டன.
நிகழ்வில், ஊரக வளர்ச்சி முகமைத் திட்ட இயக்குநர் கவிதா, வருவாய்க் கோட்டாட்சியர் விமல்ராஜ், சமூகப் பாதுகாப்புத் திட்டத் தனித்துணை ஆட்சியர் பாலசுப்பிரமணியம், பிற்பட்டோர் நல அலுவலர் சாந்தி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி உள்ளிட்ட பல்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.