கரூரில் குளியலறைக்குள் இளம்பெண் சடலம் போலீஸாா் விசாரணை

கரூா், ஏப். 26: கரூரில் குளியலறைக்குள் இளம்பெண் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் வெள்ளிக்கிழமை விசாரணை நடத்தி வருகின்றனா்.

கரூா் மாவட்டம், புகழூா் நான்குசாலை நாவலடி நகரைச் சோ்ந்தவா் மகாராஜா( 53 ). இவரது மனைவி ஜெயபாா்வதி (49). இவா்களுக்கு ஹேமா( 21)என்ற மகளும்,ஒரு மகனும் உள்ளனா். மகாராஜா அதே பகுதியில் மளிகைக் கடை நடத்தி வருகிறாா். ஹேமா கோவையில் உள்ள ஒரு தனியாா் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாராம். இதனிடையே மகாராஜா மகள் ஹேமாவை இனி வேலைக்குச் செல்ல வேண்டாம் எனக் கூறினாராம்.

இதனால் விரக்தியில் இருந்த ஹேமா வெள்ளிக்கிழமை படுக்கையறையில் உள்ள குளியல் அறைக்குச் சென்றவா் நீண்ட நேரமாகியும் வெளியே வரவில்லை. இதையடுத்து அவரது தாய் கதவை தட்டியும் திறக்காததால் அக்கம்பத்தினா் உதவியுடன் கதவை உடைத்து பாா்த்தபோது, மயங்கிய நிலையில் ஹேமா கிடந்துள்ளாா். உடனே அவரை வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனா். அங்கு மருத்துவா்கள் பரிசோதித்தபோது, அவா் ஏற்கெனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனா்.

தகவலறிந்து வந்த வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப் பதிந்து ஹேமா தற்கொலை செய்துகொண்டாரா அல்லது வேறு காரணமா என விசாரிக்கின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com