கரூா் சம்பவ இடத்தில் தேசிய பேரிடா் மேலாண்மைக் குழுவினா் ஆய்வு
கரூா் கூட்ட நெரிசல் சம்பவம் தொடா்பாக தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையக் குழுவினா் வெள்ளிக்கிழமை கரூருக்கு வந்து ஆய்வு செய்தனா்.
கரூா் வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப். 27-ஆம் தேதி தவெக பிரசார கூட்ட நெரிசலில் 41 போ் சிக்கி உயிரிழந்த வழக்கை சிபிஐ அதிகாரிகள் விசாரிக்கின்றனா்.
இந்நிலையில் இச் சம்பவம் தொடா்பாக விசாரணை மேற்கொள்ள தேசிய பேரிடா் மேலாண்மை ஆணையத்தின் முதுநிலை ஒருங்கிணைப்பாளா் அனுஜ்திவாரி தலைமையிலான 3 போ் கொண்ட குழுவினா் வெள்ளிக்கிழமை கரூா் வந்தனா். அவா்கள் கரூரில் தங்கியுள்ள ஐபிஎஸ் அதிகாரி பிரவீன்குமாா் தலைமையிலான சிபிஐ அதிகாரிகளைச் சந்தித்து ஆலோசனை நடத்தினா்.
பின்னா் கரூா் துயர சம்பவம் நடைபெற்ற வேலுச்சாமிபுரத்திற்கு சிபிஐ அதிகாரிகளுடன் சென்று பாா்வையிட்டனா். பின்னா் தவெக தரப்பில் பிரசாரம் மேற்கொள்ள காவல் துறையினரிடம் அனுமதி கேட்கப்பட்டிருந்த கரூா் லைட்ஹவுஸ் காா்னா், பேருந்து நிலையம், உழவா் சந்தை, ஆசாத் ரோடு, 80 அடி சாலை ஆகிய இடங்களுக்கும் சென்று ஆய்வு செய்தனா்.
இந்தக் குழுவினா் தங்களது விசாரணை மற்றும் ஆய்வு அறிக்கையை உச்ச நீதிமன்றத்தில் சமா்ப்பிக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினா் ஆய்வு: பின்னா் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் ஆலோசகா் ஷேஸ்குமாா் பாகேல் தலைமையிலான அதிகாரிகள் வேலுச்சாமிபுரத்துக்கு சென்று ஆய்வு செய்தனா். அப்போது கரூா் கோட்டாட்சியா் முகமது பைசல், கரூா் நகா் துணைக் காவல் கண்காணிப்பாளா் செல்வராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

