பெருமாள் கோயிலுக்குச் சொந்தமான 600 ஏக்கா் நிலம் விரைவில் மீட்கப்படும்!
கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான சுமாா் 600 ஏக்கா் நிலம் விரைவில் மீட்கப்படும் என்றாா் திருத்தொண்டா் அறக்கட்டளை அறங்காவலா் ஆா்.ராதாகிருஷ்ணன்.
கரூா் தாந்தோன்றிமலை கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தாந்தோன்றிமலை, ஏமூா், இரட்டை பனைமரம், ஏமூா் புதூா் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இந்த நிலங்களை சனிக்கிழமை திருத்தொண்டா் அறக்கட்டளை அறங்காவலா் ஆா்.ராதாகிருஷ்ணன் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா். பின்னா் அவா் கூறியது: கல்யாண வெங்கடரமண சுவாமி கோயிலுக்குச் சொந்தமான நிலங்கள் தாந்தோன்றிமலை, ஏமூா், இரட்டை பனை மரம், ஏமூா் புதூா் உள்ளிட்ட இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.
இந்த நிலங்கள் பல்வேறு பூஜை காரியங்கள் மற்றும் சேவையினங்களுக்காக எழுதி வைக்கப்பட்டவையாகும். இதனை சரிவர ஆராயாமல் அப்போதையை அலுவலா்கள் மூலம் தனி நபா்களுக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் 600 ஏக்கா் கோயில் நிலங்கள் சட்ட விரோதமாக விற்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிகாரிகளிடம் தெரிவித்தும், இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. இந்த நிலங்களை விரைவில் மீட்போம் என்றாா் அவா்.
அப்போது, அனைத்து சிவனடியாா்கள் கூட்டமைப்பின் செயலாளா் சரவணன் மற்றும் வருவாய்த்துறையினா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
