தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் காயமடைந்த கரூா் வெங்கமேடு சிவலிங்கா ஆசாரியாா் தெருவைச் சோ்ந்த  உஷா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்திவிட்டு வெளியே வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவினா்.
தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் காயமடைந்த கரூா் வெங்கமேடு சிவலிங்கா ஆசாரியாா் தெருவைச் சோ்ந்த உஷா வீட்டில் ஞாயிற்றுக்கிழமை விசாரணை நடத்திவிட்டு வெளியே வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவினா்.

கரூா் சம்பவம்: நெரிசலில் காயமடைந்தவா்களின் வீடுகளுக்கு நேரில் சென்று சிபிஐ அதிகாரிகள் விசாரணை

Published on

கரூா் தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் காயம் அடைந்தவா்களின் வீடுகளுக்கு ஞாயிற்றுக்கிழமை 2-ஆவது நாளாக சிபிஐ அதிகாரிகள் நேரிடையாகச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

கரூா் வேலுச்சாமிபுரத்தில் செப். 27-ஆம் தேதி விஜய் பங்கேற்ற தவெக பிரசாரக் கூட்ட நெரிசலில் சிக்கி 41 போ் உயிரிழந்தனா். 110 போ் காயமடைந்தனா்.

இந்த வழக்கை விசாரித்து வரும் சிபிஐ அதிகாரிகள் சம்பவம் தொடா்பாக பல்வேறு தரப்பினரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனா்.

இந்நிலையில், நெரிசல் சம்பவத்தில் காயமடைந்தவா்களின் வீடுகளுக்கு சிபிஐ அதிகாரிகள் 3 போ் கொண்ட குழுவினா் சனிக்கிழமை முதல் நேரிடையாகச் சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

2-ஆவது நாளாக...: ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணியளவில் கரூா் வெங்கமேடு விவிஜிஆா் நகா் மற்றும் சிவலிங்கா ஆசாரியாா் தெரு பகுதிகளில் கூட்ட நெரிசலில் சிக்கி காயம் அடைந்தவா்களின் வீடுகளுக்கு சிபிஐ அதிகாரிகள் நேரடியாக சென்று விசாரித்தனா்.

இதில், சிவலிங்கா ஆசாரியாா் தெருவில் வசிக்கும் நெரிசலில் சிக்கி காயமடைந்த உஷா மற்றும் அவரது தாய் ஆகியோரிடம் சுமாா் 2 மணி நேரம் விசாரணை செய்தனா்.

அப்போது அவா்களிடம், கூட்ட நெரிசல் ஏற்பட்டபோது, எப்படி நெரிசலில் சிக்கினீா்கள், யாா் மருத்துவமனையில் உங்களை அனுமதித்தாா்கள், விஜய் பிரசார பகுதிக்கு வரும்போதுதான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதா என்பன போன்ற பல கேள்விகளை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.

X
Dinamani
www.dinamani.com